புதன், நவம்பர் 24, 2010

vivasaayam oru vilakkam

நவீன விவசாயியின் கசப்பு அனுபவம் பற்றி நண்பர் ஆனந்த்(கால்நடை மருத்துவக்கல்லுரியில் பயின்று மென்பொருளாளராக அமெரிக்காவில் பணி புரிபவர்) சில கருத்துக்களை பரிமாறி இருந்தார், அவருக்கு என்னுடைய விளக்கம்  இந்த போஸ்ட்.
விவசாயத்தில் லாபமே ஈட்ட முடியாதா, விவசாயத்தில் படித்தவர்கள் ஈடுபட முடியாதா என பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்,  நான் தஞ்சையில் சில பகுதிகளில் விவசாயிகள் நல்ல செழிப்பாக இருப்பத்தை பார்த்திருக்கிறேன், அவர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் விவசாயம் சார்பாக ஏதாவது அவர்கள் நிலத்தில் செய்து கொண்டே இருப்பார்கள், மொத்த கிராமமே சொந்த பந்தங்களாக இருப்பார்கள், ஒருவர் நிலத்தில் நடவு என்றால், மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் வந்து வேலை செய்வார்கள், நிலத்தின் சொந்தக்காரர் மதிய உணவு மற்றும் தேநீர் மட்டும் கொடுத்தால் போதும் ,அதுபோல் மற்றவர் நிலத்தில் இவர் சென்று வேலை செய்ய வேண்டும், அவர்கள் சும்மா இருப்பது கிடையாது, நிலத்தில் ஏதேனும்  வேலை செய்து கொண்டே இருப்பார்கள்(சும்மா இருக்கும் நிலமாக இருந்தாலும் உழுது போட்டு வைத்தால் களை அண்டாது.).  ஒரு மென்பொருளாளர் தோராயமாக மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பார் என்று வைத்து கொள்வோம், அவரே முழு நேர விவசாயி ஆனால் அந்த வருமானம் வருவதற்கு குறைந்தது ஒரு நாற்பது ஐம்பது எக்கராவது இருக்க வேண்டும், மேலும் இந்த வருமானம் அவருடைய திறமையை மட்டும் சார்ந்தது அல்ல, மழை பொய்க்கலாம், தேவையில்லாத நேரத்தில் மழை வந்து விளைச்சல் குறையலாம்.  முழுநேர விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே என நீங்கள் கேட்கலாம், உண்மைதான் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதால், இதுதான் எனக்கு வாய்த்தது என கிடைத்ததை எண்ணி மகிழ வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு, உங்களுக்கு அப்படி இல்லை. இந்த வருடம் விவசாயப்பணிகள் துவங்க வேண்டிய நேரத்தில் ஆறுகளில் தண்ணீர் வராததால், பல இடங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை, இப்போது நல்ல மழை பெய்து ஆறு குளங்கள் நிரம்பி உள்ளது, இதை நம்பி விவசாயம் செய்தால், அறுவடை செய்யும் காலத்திற்கு முந்திய நேரத்தில்(பிப்ரவரி-மார்ச் மாதங்களில்) தண்ணீர் இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஒரு சாதாரண விவசாயியின் எதிர்பார்ப்புகள், வாழ்க்கை முறைகள் ஒரு மென்பொருளாளரை விட மிக  குறைவு, அவர் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படித்து அரசு பேருந்தில் பயணம் செய்வர், அமெரிக்காவில் பணி புரிந்து அமெரிக்க வாழ்க்கைக்கு பழக்கமான மென்பொருளாளரின் குழந்தைகள் மற்றும் மனைவி எந்த அளவு ஒரு சராசரி இந்திய கிராம வாழ்க்கைக்கு ஒத்து போவார்கள் என்பது கேள்வி குறியே.
இதனால் எல்லாம் நீங்கள் விவசாயத்தில் ஈடு பட வேண்டும் என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட வேண்டாம், இப்போது நிறைய விவசாய சாதனங்கள் வர ஆரம்பித்து உள்ளன, பெரிய அளவில்(ஐம்பது ஏக்கர்) அளவில் விவசாய நிலம் வாங்கி உங்கள் தந்தையார் அல்லது நெருங்கிய உறவினர்கள் (அனேகமாக பணி ஓய்வு பெற்றவர்கள்) யாராவது இருந்தால் அவர்கள் மூலமாக விவசாயத்தில் ஈடு படுங்கள், உங்கள் வேலையை விட்டு விட வேண்டாம், ஒன்று இரண்டு ஆண்டுகளில் உங்களுக்கு இந்த தொழிலின் நெளிவு சுளிவுகள் தெரிந்து விடும், பின்னர் நீங்கள் முழு நேர விவசாயி ஆவதா இல்லையா என்பது உங்களுக்கு புலப்பட்டு விடும். வாழ்த்துக்கள்.
கரையான்.

1 கருத்து: