கொஞ்சம் எனது வாழ்க்கைப் பக்கங்களை திருப்பி பள்ளிப் பருவம் சென்று அசை போட்டால்.....
இலுப்பை மரங்கள் சூழ்ந்த வண்டி மரிச்ச்ம்மன் கோயிலும் ,குளதுக்கரை ஆலமரமும் ,பருத்தி,மிளகாய்,வெங்காயம் விளையும் வயல் வெளிகளும் விளையாட்டு மைதானங்களாய் இருந்த காலம் அது .
அரசு ஆரம்பப் பாடசாலை முடிந்த பின் அடிக்கிற மணிச் சத்தம் காதில் தேன் வந்து பாய்வது போல
இருக்கும். சனி ஞாயிற்றுக் கிழமைகள் வரும் போது கிடைக்கிற ஆனந்தம் அளவிட முடியாதது. புழுதி பறக்கும்
திடல்களில் கோலி,பம்பரம், கிட்டிப் புள், கள்ளன் போலிஸ்,கபடி என கிராமத்து விளையாட்டுகள் தூள் பறக்கும். கொடுக்காப் புளியிலிருந்து ,பனம் பழம் வரை எல்லாமே இலவசமாய்க் கிடைக்கிற கிராமத்து உணவுகள். சோளத் தட்டை கூட கரும்பு போல் சுவைத்த காலம்.சீசனுக்குத் தகுந்த மாதிரி மொச்சக் கொட்டையும்,நிலக் கடலையும் வீட்டில் கிட்டும் மாலை snacks .நீர் நிறைந்து வழிகிற காலங்களில் குளமும் மற்ற சமயங்களில் கிணறும் ஸ்விம்மிங் பூல்கள்.அல்லது மூச்சுத் திணற பம்பு செட் அடியில் மணிக்கணக்காய் குளியல்.எப்போதாவது கிராமத்தில் எட்டிப் பார்க்கும் பேருந்து சத்தம் தவிர பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிற கிராமம் வைகாசி ,ஆனி, ஆடி மாதங்களில் அடிக்கிற பேய் காற்றும் கொஞ்சம் எட்டிப் பார்க்கிற குற்றால சீசன் எபெக்டும் கிராமத்துக்குப் புதிய வண்ணம் சேர்க்கும். கோவணம் மட்டும் ஆடையாய் கொண்ட வெள்ளந்தி மனிதர்கள் ,பள்ளிச் சிறுவர்களிடம் கடிதம் வந்தால் படித்துக் காட்டச் சொல்லுகிற அப்பத்தாக்கள் ,நல்ல மகசூல் கிடைத்தால் மட்டுமே புதுத் துணி எடுக்கிற விவசாயக் குடும்பங்கள் ,பொங்கல் தீபாவளியை விட கோவில் கோடை விழாவை கிடா வெட்டி சொந்த பந்தங்களுக்கெல்லாம் விருந்து வைக்கிற ஊர் மக்கள் ,எப்போதேனும் பக்கத்து டவுனில் கமல்,ரஜினி படம் பார்த்து வரும் பெண்கள் ,இரவு எட்டு மணிக்கெலாம் நிசப்தமாகி விட்டாலும் சாராய உந்துதலில் திடீரென சண்டைகள் இட்டுக் கொள்ளும் பங்காளிகள் உதிர்க்கின்ற செந்தமிழ் வார்த்தைகள் ,நாள் முழுக்க மரத்தடியில் கதை பேசி படுப்பதற்கு மட்டும் வீடு திரும்பும் வெட்டிகள் என்று கிராமத்தின் அடையாளங்கள் எனது பால்யத்தில் மிச்சம் இருந்தன.
இப்போது ஊர் பக்கம் செல்லும் போது காண்பது கான்வென்ட் யூனிபோர்ம் அணிந்த சிறுவர் சிறுமியர் பள்ளி வாகனத்துக்காய் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.எல்லா வீடுகளிலும் கேபிள் டிவி அலறல். வில்லுப் பாட்டும், பறையும் ,கரகாட்டமும் கேளிக்கை நிகழ்ச்ச்சிகளாய் இருந்த கொடை விழா ரெகார்ட் டான்ஸ் மற்றும் லைட் மியுசிக்கில் சீரியல் லைட் வெளிச்சத்தில் மறைந்து போனது. அம்மன் கோவிலும் ,சுடலை மாடசாமி கோவிலும் மார்பில் பளபளப்பில் ஏசியன் பெயிண்ட் பூசிய சுவர்களோடு டாலடித்துக் கொண்டிருக்கிறது.அப்பளப் பூவும் ,ஆரஞ்சு மிட்டாயும் கிடைத்த கடைகளில் டைரி மில்க் சாக்லேட் ,லேஸ் சிப்ப்ஸ் எல்லாம் தொங்கிக்
கொண்டிருக்கிறது.கலப்பு உரம் .பூச்சி மருந்து பயன் பாட்டில் மண் வளம் அழிந்து காய் கறிகள் எண்டோ சல்பான் கறைகளுடன் கேரளா
சந்தைக்கு லாரியில் பயணிக்கிறது.கிட்டிபுள் விளையாடிய சிறுவர்கள் கிரிக்கெட்டுக்கு மாறி வருஷங்கள் ஆகி விட்டன. கார்ட்டூன் ,போகோ சேனல்கள் கிராமத்துச் சிறுவர்களையும் வீட்டோடு கட்டிபோட்டு விட்டன.எல்லா வீடுகளிலும் ஒன்றுக்கு ரெண்டாய் இலவச கலர் டிவி ,இலவச காஸ் அடுப்பு ,ஒரு ரூபாய்க்கு அரிசி ,பொங்கல் வந்தால் வேட்டி சேலை ,அரசு வேலை வாய்ப்புத் திட்டத்தில் சும்மா கிடக்கிற குளத்தை வெட்டியதாய்க் காண்பித்து வேலை கொடுக்கும் அரசாங்கம், இளைஞர்களை விஸ்கி ,பிராண்டி பிடியில் தள்ளும் டாஸ் மாக் கடைகள் என கிராமத்து முகம் தொலைந்து பொய் ரொம்ப நாளாகி விட்டது .
இருந்தாலும் சொந்த ஊர் பக்கம் எப்போதாவது எட்டி பார்த்து வரும் போது கிடைக்கிற மன நிறைவு வார்த்தைகளில் அடங்காது .
நகரத்தின் அழுகிய நாற்றங்களில் ,போக்குவரத்து நெரிசல்களில் ,பக்கத்து பிளாட்டில் இருந்தாலும் பேசுவதற்கு
யோசிக்கும் மனிதர்களில் ,மறந்து போன மனித நேயங்களில் ,எல்லாமே வியாபாரமான தொடர்புகளில்
இன்னமும் கிராமங்கள் முழுவதுமாய் தொலைந்து போய் விடவில்லை .
எனது விருப்பம் இன்னமும் அமைதியான மாசுபடாத காற்று வீசுகிற கிராமங்களே
சொக்ஸ்