இந்தச் சிறுவனின் பெயர் ராஜேஷ். மெரீனாவில் சுண்டல் விற்கும் எண்ணற்ற சிறுவர் களில் ராஜேஷும் ஒருவன். சொந்த ஊர் கீழப்பசலை.மானாமதுரை அருகே இ ருக்கிறது. பிழைப்புக்காக சென்னை வந்த குடும்பங்களில் ராஜேஷின் குடும்பமும் ஒன்று. ராஜேஷ் நானூறுக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று பத்தாவது பாஸ் செய்துவிட் டான். ‘நானூத்தம்பதை தாண்டணும்னு நினைச்சேன் சார், முடியல’ என்று வருத்தத்தோடு சொல்கிறான். பகலில் சாந்தோமிலிருக்கும் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடம் போனாலும் மாலையும் இரவும் மெரீனா கடற்கரையில் சுண்டல் விற்கிறான்.
“பப்ளிக் எக்சாம் எழுதுறதுக்கு வேற ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க.பெரிய ஹால், புதுப் புது ஆட்களைப் பாத்ததும் பதட்டமாயிடுச்சு. அதனாலதான் பரீட்சை சரியா எழுத முடியல. பப்ளிக் பரீட்சைன்னதும் இன்னும் டென்ஷன்’’ என்று தான் தேர்வு சரியாக எழுத முடியாமல் போனதற்கான காரணங்களை அலசுகிறான்.
ராஜேஷின் தந்தைக்கும் சுண்டல் வியாபாரம்தான். கூடப் பிறந்தவர்கள் மூன்று பேர். எல்லோரும் ராஜேஷுக்கு இளையவர்கள்.
“ஊர்ல எங்க தாத்தா நல்லா வசதியாதான் இருந்திருக்கார். ஆனால் சொத்தெல்லாம் அழிஞ்சிடுச்சு. அதனால எங்கப்பா பொழப்பத் தேடி மெட்ராஸுக்கு வந்துட்டார். சுண் டல், சமோசா போடுவார். அவரே கொண்டு போய் வித்துக்கிட்டு இருந்தார். ஆனா அந்தக் காசு பத்தல. அதனால என்னையும் இந்தத் தொழில்ல இறக்கிவிட்டுட்டார்’’ எ ன்று தன் தந்தையைப் பற்றி கூறுகிறான். தந்தை எத்தனை சம்பாதித்தாலும் அது டாஸ்மாக்குக்குப் போய்விடுகிறதாம். குடிப்பது மட்டுமில்லாமல் அடிக்கவும் செய்வாராம். ராஜேஷின் அம்மாவிடம் பேசும்போது அவர் அடிப்பதன் பயங்கரம் தெரிந்தது. நாம் பேசும் வார்த்தைகள் எதுவும் ராஜேஷின் தாயாரின் காதில் விழவில்லை. காரணம் குடித்துவிட்டு கணவர் காதில் அடித்த அடியில் அவரின் காது கெட்டுவிட்டதாம்.
“ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் சுண்டல் டப்பாவை எடுத்துக்கிட்டு மெரீனாவுக்கு வந்துடுவேன். அஞ்சு மணிக்கு வியாபாரத்தைத் தொடங்கினா ராத்திரி ஒம்பது மணி வரைக்கும் வியாபாரம் ஓடும். சில நாள் நூறு ரூவா கிடைக்கும்.சில நாள் நூத்தம்பதுகூட கிடைக்கும். மழை பெய்ஞ்சா ஒண்ணும் கிடைக்காது. நான் சம்பாதிக்கிற காசை நம்பித்தான் வீட்டுல இருப்பாங்க. அப்பா சம்பாதிக்கிறதை நம்ப முடியாது. அவரு காசை வீட்டுக்குக் கொண்டு வருவாரா, ஒயின் ஷாப்ல விட்டுருவாரானு தெரியாது’’ என்று சொல்லும் ராஜேஷ், பள்ளிக்கூட படிப்பைப் படிப்பது ராத்திரி பத்து மணியிலிருந்து பதினொன்றரை வரை. பிறகு காலையில் ஆறு மணி முதல் ஏழரை வரை.
சுண்டல் விற்கும் போது சந்திக்கும் இடறுகள் அதிகம் என்பதால் தனக்கென சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறான் ராஜேஷ். காதல் ஜோடிகளிடம் சுண்டல் விற்பதில்லை. கடற்கரையில் தண்ணியடித்துக் கொண்டிருக்கும் கும்பல் பக்கம் போவதில்லை. இருட்டான இடங்களில் அமர்ந்திருப்பவர்களிடம் விற்பதில்லை. ”அதெல்லாம் வம்பு சார்’’ என்கிறான். வெளி மாவட்டங்களில் அரசியல் மாநாடுகள் நடக்கும்போது அங்கு சென்று சுண்டல் விற்ற அனுபவமும் ராஜேஷுக்கு இருக்கிறது. “ரெண்டு நாள் அப்படி போய்ட்டு வந்தா ஆயிரம் ரூபா மொத்தமா கிடைக்கும் சார்’’ என்கிறான்.
ராஜேஷின் வீடு கடற்கரை அருகிலுள்ள நொச்சிக்குப்பத்தில் இருக்கிறது. அதை வீடு என்று சொல்ல இயலாது. ஒரே ஒரு அறை. அதற்கு ஆயிரம் ரூபாய் வாடகையாம். அப்பா சம்பாதிப்பதைக் கொடுத்தால் உண்டு. இல்லாவிடில் அதையும் ராஜேஷின் சம்பாத்தி யத்தில்தான் கட்ட வேண்டும்.
”சுண்டல் விக்கிறதெல்லாம் எனக்குப் பிரச்னையா தெரியல. ஆனா படிப்பு போகுதேனுதான் கவலையா இருக்கு’’ என்று சொல்லும் ராஜேஷுக்கு இரண்டு லட்சியங்கள். ஒன்று, ப்ளஸ்டூவில் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடிப்பது. அடுத்த லட்சியம், கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஆவது.
“ஆனா.. ட்யூஷன் போனாதான் மார்க் எடுக்க முடியும்னு சொல்றாங்க. அதுக்கெல்லாம் நமக்கெங்க சார் வசதி, உதவுறதுக்கும் யாரும் இல்ல நானேதான் படிக்கணும்’’ எ ன்று சொல்லும் அவன் குரலில் லேசான ஆதங்கம் இருந்தாலும் நம்பிக்கை இருக்கிறது.
உதவ கை கிடைக்காதபோது நம்பிக்கைதானே வாழ்க்கை..
நன்றி: குமுதம்....
படித்ததில் பிடித்ததால்...சென்னை நட்சதிரங்களுக்காக....
கரையான்.