சனி, ஏப்ரல் 16, 2011

யார் வேண்ணாலும் வாங்க..! ஆனா கொஞ்சமா திருடுங்க..!



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு வழியாகத் தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. அடுத்து எந்தத் திருடன் வரப் போகிறான் என்பதற்காக நம்மை ஒரு மாதம் காலத்திற்கு ஏங்க வைத்துவிட்டது தேர்தல் கமிஷன்..!

இருக்கின்ற மெயின் திருடர்களில் இரண்டு பேரில் ஒருவர்தான் வரப் போவது உறுதியென்றாலும், அது யார் என்பதை அறிய ரொம்பத்தான் மனசு ஆவலாக இருக்கிறது..!

இப்போது இருக்கும் கொள்ளைக்காரர்களே மீண்டும் வந்தால் அசுர வேகத்தில் தங்கள் மீதிருக்கும் குற்றச்சாட்டுக்களை அழிக்கும் வேலையில்தான் ஈடுபடுவார்கள்..!

ஆட்சிக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு கொள்ளைக்காரர்கள்.. தங்கள் மீது ஏற்கெனவே இருக்கின்ற வழக்குகளை சப்தமில்லாமல் எப்படி முடிப்பது என்று யோசித்து செயல்படுவார்கள்..!
ஆனாலும் இந்தத் தேர்தலின் மூலம் ஒன்று மட்டும் உறுதியாகிறது. நாம் எவ்வளவு கொள்ளையடித்தாலும் சரி.. அந்தக் கொள்ளைப் பணத்தில் கொஞ்சத்தை மக்களுக்கு அள்ளி வீசினால் போதும். அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதை இரண்டு கொள்ளைக் கூட்டமும் புரிந்துதான் வைத்திருக்கிறது.!

இந்தத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஆளும் கட்சித் தரப்பிலும், எதிர்க் கட்சித் தரப்பிலும் பணக்கட்டுக்கள் அள்ளி வீசப்பட்டுள்ளன. இப்படி பணத்தினால் வாங்கப்படுகின்ற ஓட்டுக்களை வைத்து ஆட்சி அமைக்கிறோமே என்கிற வெட்கமும், சூடும், சொரணையும் இல்லாமலேயே இதுவரையில் மைனாரிட்டி ஆட்சியை இழுத்துக் கொண்டு வந்துவிட்டார் தாத்தா..!

இனி அடுத்து ஜெயித்தாலும் இதே உணர்வோடு மீண்டும் முதல்வராகிவிடுவார். எதிர்த்தரப்பு ஆத்தாவும் மக்கள் மனநிறைவோடு தன்னைத் தேர்ந்தெடுத்ததாகக் கூசாமல் பொய் சொல்லி அரியணை ஏறப் போகிறார். இவர் வெற்றி பெற்றால் இவர் முதல்வர் பதவியேற்கவே கூடாது.. தார்மீக அரசியல் அறத்தின் அடிப்படையில் தன் மீதான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றத்தில் முறைப்படி சந்தித்து அதில் வெற்றி பெற்ற பின்பு இவர் ஆட்சிப் பொறுப்பேற்கலாம்..!

ஆனால் இந்தத் தார்மீக அரசியல் நெறி இரண்டு கழகங்களிடமும் இல்லை என்பதால் இது நமது அதீதமான ஆசையாக, கனவாகவே இருந்து தொலையும் என்று நினைக்கிறேன்..! இது இப்படியே இருநது தொலையட்டும்..!
தற்போது நடந்து முடிந்த தேர்தலின் வாக்குப் பதிவு பற்றிய புள்ளிவிவரங்களை எனது தளத்தில் பதிவு செய்து வைக்க விரும்புகிறேன். அதற்காக பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை இங்கே தொகுத்தளித்துள்ளேன்..!
இதுவரை நடந்து முடிந்த மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் தற்போதைய தேர்தலின் வாக்குப் பதிவு 10 முதல் 15 சதவீதம்வரை உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு நடவடிக்கையும், அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும்தான் வாக்குப் பதிவு அதிகரிக்கக் காரணம் என்று கருதப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரப்படுத்தியும், ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் விடியோ வாகனம் மூலம் படக் காட்சிகளை நடத்தி விளம்பரப்படுத்தியதும் இன்னுமொரு முக்கிய காரணமாகும்.இதுவரை இல்லாத அளவுக்கு 77.8 சதவீதம் ஓட்டுக்கள் இப்போது பதிவாகியுள்ளது. அதிக அளவாக கரூர் மாவட்டத்திலும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் பதிவாகியுள்ளன.

தொகுதிவாரியாகப் பார்த்தால் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்(தனி) தொகுதியில் - 91.89 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

குறைந்த அளவாக, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் - 64.07 சதவீதம் ஓட்டுப் பதிவாகியிருந்தது.

தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதமும் வெற்றியும் :

1967 - 76.57% (திமுக வெற்றி)

1971 - 72.10% (திமுக வெற்றி)

1977 - 61.58% (அதிமுக வெற்றி)

1980 - 65.42% (அதிமுக வெற்றி)

1984 - 73.47% (அதிமுக வெற்றி)

1989 - 69.69% (திமுக வெற்றி)

1991 - 63.84% (அதிமுக வெற்றி)

1996 - 66.95% (திமுக வெற்றி)

2001 - 59.07% (அதிமுக வெற்றி)

2006 - 70.56% (திமுக வெற்றி)

இந்தக் கணக்குப்படி பார்த்தால் தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அக்கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் நினைக்கிறார்கள். இன்னொருபுறம்.. அதெல்லாமில்லை.. மக்கள் அலை, அலையாக வந்தது இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் என்கிறது எதிர்க்கட்சிக் கூட்டணியினர்...!

இந்த நேரத்தில் பாரதி என்னும் பஸ்ஸுலக பதிவர் வேறொரு முக்கியச் செய்தியொன்றை இன்று பதிவிட்டிருந்தார்.

இதுவரையில் தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைத்து இருக்கிறது. அதே செண்டிமெண்ட் இந்த முறையும் தொடருமா என்று ஆதாரத்துடன் வினவியுள்ளார்..!

1971 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)

1977 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)

1980 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)

1984 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)

1989 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)

1991 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)

1996 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)

2001 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)

2006 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)

இதன்படி பார்த்தால் கன்னியாகுமரி தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற கணக்கைத் தோண்டிப் பார்த்து கொஞ்சம் லேசுபாசாக நாம் மூச்சுவிட்டுக் கொள்ளலாம்..!

தி.மு.க. தரப்பில் அமைச்சர் சுரேஷ்ராஜனும், அ.தி.மு.க. தரப்பில் கே.டி.பச்சைமாலும், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் காந்தியும் போட்டியிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் சுரேஷ்ராஜனுக்கு ஆதரவு குறைவாக இருந்ததினால் சில நாட்கள் இரவு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு அந்த நேரத்தில் பணக் கவர்கள் தொகுதியில் குறிப்பிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக ஜூ.வி.யின் ஸ்கூப் நியூஸ் சொல்கிறது.

சுரேஷ்ராஜன் ம.தி.மு.க. நகரச் செயலாளரின் வீட்டிற்கே நேரில் சென்று ஆதரவு கேட்டு உறுதிமொழியையும் பெற்றுவிட்டதாக அதே ஜூ.வி. அடுத்த இதழில் சொல்கிறது..!

இவருடைய வெற்றியைத் தடுப்பது பாரதீய ஜனதாவுக்குக் கிடைக்கவிருக்கும் ஓட்டுக்கள்தான் என்று நக்கீரன் சொல்லியிருக்கிறது..!

எது எப்படியோ.. எந்தத் திருட்டுப் பயலுக வந்தாலும் நான் அவுககிட்ட ஒரே ஒரு கோரிக்கையைத்தான் வைக்கிறேன்..

இந்தத் தடவையாச்சும் கொஞ்சமா திருடங்கடா அயோக்கியப் பசங்களா..! உங்க குடும்பத்துக்கு கொஞ்சமாச்சும் புண்ணியத்தைச் சேர்த்து வையுங்கப்பா.. வருங்காலத்துல எங்க பேரப்புள்ளைக, உங்க பேரப் புள்ளைகளை பார்த்து "குடும்பமாடா?"ன்னு மூஞ்சில காறித் துப்புற மாதிரி செஞ்சுட்டுப் போயிராதீங்க..!
அவ்வளவுதான் சொல்லுவோம்..!

                                                  With thanks from -   http://truetamilans.blogspot.com


Chocks









3 கருத்துகள்:

  1. I reiterate chockan must come into politics to clean-up the system. It is no use getting angry or frustrated on the present status of public life. Come on chockaa.... We will follow your footsteps....
    karaiyan.

    பதிலளிநீக்கு
  2. Hear Hear.. Go chocka we will be your cheer team!
    It is disheartening to read this and I can understand your vexation with the whole system.
    Gujili

    பதிலளிநீக்கு
  3. Chokku arasiyalukku wandhaa,meley kanda kasmalangal,"Chokka yenna Kokka?" yendru udhari wittu poi widuwaargal.
    BHAI.

    பதிலளிநீக்கு