செவ்வாய், ஜனவரி 03, 2012

marakka mudiyatha jency


செண்பகத்தக்காவின் குரல்

கீழப்புதுத்தெருவிலுள்ள கண்ணப்பர் மடத்தையொட்டிய வளவில்தான் செண்பகத்தக்கா குடியிருந்தாள். ஒரே ஒரு அறை மட்டுமேயுள்ள வீட்டில், தையல் மெஷினை வைத்துக் கொண்டு, வயதான தன் தாயுடன் வசித்து வந்த செண்பத்தக்காவை, அவளது வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டி வெளியே எங்கேயுமே நான் பார்த்த ஞாபகம் இல்லை. அம்மா தைக்கக் கொடுத்த துணிகளை வாங்கப் போகும் போது மட்டுமே என்னால் செண்பகத்தக்காவைப் பார்க்க முடிந்திருக்கிறது. வெள்ளை நிறத்தில் முத்து முத்தாக ஒரு பாசிமாலை போட்டிருப்பாள் செண்பகத்தக்கா. கைகளில் ரப்பர் வளையல்கள். நெற்றியில் புள்ளியாக சாந்துப்பொட்டும், அதன் மேல் திருநீற்றுக்கீற்றும் இட்டிருப்பாள். எந்த சமயம் பார்க்கப் போனாலும் அப்போதுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாற்போல் பளிச்சென்றே இருக்கும் செண்பகத்தக்காவின் முகம். வறுமையில் செம்மையாக எப்போதும் சிரித்த முகம்தான். ‘வாடே, இரி’. ஸ்டூலை எடுத்துப் போடுவாள். தைத்த துணி தயாராக இருந்தாலும் உடனே கொடுக்க மாட்டாள். ‘என்ன அவசரம்? காப்பி கீப்பி குடிச்சுட்டு போ’. தையல் மெஷினுக்கு மேலே உள்ள ஒரு மர ஸ்டாண்டில் சணல் வைத்துக் கட்டப்பட்ட டிரான்ஸிஸ்டர் பாடிக் கொண்டிருக்கும். டிரான்ஸிஸ்டருடன் சேர்ந்து செண்பகத்தக்காவும் மெல்லிய குரலில் பாடுவாள். இப்படி பல ஒருகுரல் பாடல்களை செண்பகத்தக்காவின் குரலுடன் சேர்த்து இருகுரல் பாடல்களாகக் கேட்டிருக்கிறேன். அப்படி நான் கேட்ட ஒரு பாடலின் படமான ‘புதிய வார்ப்புகள்’ அப்போது திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது.
‘என்ன, செம்பகம் இன்னைக்கு என்ன பாட்டு பாடிக்கிட்டிருந்தா?’ வீட்டுக்கு வந்தவுடன் எப்போதும் அம்மா கேட்பாள். ஒவ்வொருமுறை ஒவ்வொரு பாட்டைச் சொல்வேன். ஆனால் செண்பகத்தக்காவால் எனக்கு முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடலாக நான் இன்றுவரை ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் ‘இதயம் போகுதே’ பாடலைத்தான் நினைக்கிறேன். அந்தச் சிறுவயதிலேயே ஏனோ செண்பகத்தக்காவின் வாழ்க்கையுடன் அந்தப் பாடலை சம்பந்தப்படுத்தியே கேட்டுப் பழகியிருக்கிறேன். அந்தப் பாடலைப் பாடிய ஜென்ஸி எப்படியிருப்பார் என்று எனக்கு அப்போது தெரியாது. அது தெரியவரும்வரை செண்பகத்தக்காதான் எனக்கு ஜென்ஸி. தெரிந்த பிறகும் கூடத்தான்.
jency_big
‘இதயம் போகுதே’ பாடல் தன்னை விட்டு வெளியூருக்குச் செல்லும் காதலனைப் பார்த்து ஏக்கத்துடன் பாடும் நாயகியின் பாடல். காதலன் தன்னை எப்படியும் வந்து கைப்பிடிப்பான் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாமல் பாடப்படும் பாடலை ஜென்ஸி பாடியிருக்கும் விதம் அத்தனை தத்ரூபமானது. அதுவும் அந்த மெட்டின் துவக்கத்தில் ‘இதயம் போ . . . . . . . .குதே . . . .’ என்று ஜென்ஸி பாடும் விதத்தில் இதயம் மெல்ல மெல்ல விலகி தூரமாகப் போய்க் கொண்டிருப்பதை நாம் கண்கூடாக உணரலாம். மிக எளிமையான துவக்கத்துடன் அமைந்த இந்தப் பாடலின் சரணங்களில்ஒரு நொடியில் பாடுவதற்குக் கடினமான இடத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அதையும் தனது வெகுளியான குரலால் ‘தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா’ஜென்ஸி பாடியிருக்கும் விதத்தைக் கேளுங்கள். இதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் சரணங்களின் இடையில் வார்த்தைகளில்லாமல் ‘லாலல லலலால லலலாலலா’ என்றும் ஜென்ஸி பாடியிருக்கிறார். ஒரு பாடலுக்குள்ளேயே அவர் வேறோர் ஜென்ஸியாகத் தெரியும் இடமது.
தான் பாடி வந்த காலகட்டத்தில் ஜென்ஸி, பல இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த பாடகியாக இருந்த காரணத்தை இப்போது யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. எந்த நளினமும், மேதமையும் இல்லாத ஜென்ஸியின் குரலை தங்களின் குரலாக அப்போதைய பெரும்பாலான யுவதிகளும், தங்கள் சகோதரிகளின், காதலிகளின் குரலாக அப்போதைய இளைஞர்களும் நினைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ’ஆயிரம் மலர்களே மலருங்கள்', 'இதயம் போகுதே', 'அடி பெண்ணே’ இப்படி எந்த ஒரு ஜென்சியின் பாடலைக் கேட்டாலும் அதில் ஜென்சியின் குரல் கேட்பதில்லை. அடுக்களையின் குழம்புக் கொதியினூடே கேட்கும் அக்காவின் குரலாக, குளியலறையிலிருந்து சந்திரிகா சோப்பின் நுரைத்த நறுமணத்துடன் வெளியே கசிந்து ஒழுகும் அத்தை மகளின் குரலாக, மதிய உணவுக்குப் பின் ஒட்டுமொத்த வீடும் உறங்கிக் கொண்டிருக்க, ஒருச்சாய்த்துப் படுத்தபடி, 'ராணி’ புத்தகத்தைப் புரட்டியவாறே, தனக்கு மட்டும் கேட்கும் விதமாகப் பாடும் மதினியின் குரலாகத்தான் நம்மால் கேட்க முடிகிறது. இல்லையென்றால் அத்தனை தெளிவான தமிழ் உச்சரிப்பில்லாத ஜென்ஸிக்கு இத்தனை வரவேற்பு அந்த சமயத்தில் கிடைத்திருக்காது.
‘அதென்னடே, அந்த மலையாளத்துப்பிள்ள ‘மைலே மைலே’ன்னு பாடுது?’ ராமையா பிள்ளை இந்த மாதிரி குற்றம் கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் உடையவர். ‘கடவுள் அமைத்த மேடை’ படத்தின் ‘மயிலே மயிலே’ பாடலை ‘மைலே மைலே’ என்றுதான் ஜென்ஸி பாடியிருக்கிறார். இல்லையென்று சொல்லமுடியாதுதான். ஆனால் ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த அந்தப் பாடலின் சரணத்தில் ’நீ அணைக்க, நான் இருக்க, நாள் முழுக்க தேன் அளக்க’ என்னும் இடத்தை லகுவாகக் கடப்பதன் மூலம், ஜென்ஸி அக்குறையை மறக்கச் செய்கிறார். உடன்பாடியிருப்பவர் அப்போதே ஜாம்பவனாகிவிட்ட பாலசுப்ரமணியம் என்பதால் அவரது அநாயசபாடுமுறையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலுள்ள பாடல்களே ஜென்ஸி பாடியிருக்கிறார் என்றாலும், எண்பதுகளில் எல்லா திசைகளிலும் ஜென்சியின் குரலே ஒலித்தது. (இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்? இரவானால் எல்லா பண்பலை வானொலிகளிலும் ஜென்ஸியின் ராஜ்ஜியம்தான்) தனிக்குரல் பாடலான ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் ‘இதயம் போகுதே’ பாடல் ஜென்ஸிக்கு புகழ் சேர்த்தது போலவே, ’நிறம் மாறாத பூக்கள்’ திரைப்படத்தின் இருகுரல் பாடல் ஒன்றும் ஜென்ஸிக்கு பெரும் புகழ் சேர்த்தது. ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாடலை எஸ்.பி.சைலஜாவுடன் பாடிய ஜென்ஸியுடன் பாடலின் இறுதியில் வாசுதேவனும் இணைந்து கொள்வார். மூவரும் அவரவர் தனித்தன்மையுடன் பாடியிருப்பார்கள் என்றாலும் ஜென்ஸியின் குரல் தனியாகத் தெரிவதற்குக் காரணம், ஜென்ஸியிடம் இயல்பாகவே அமைந்த வெகுளித்தனமான முதிரா இளங்குரல்தான். அதனால்தான் அந்தப்பாடலை ஜென்ஸியின் குரலிலேயே துவக்கியிருந்தார் இளையராஜா. அத்தனை சிறப்பான மெட்டுடைய, நல்ல வரிகளுடைய பாடலை, தமிழே தெரியாத ஜென்ஸி எவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பாடியிருக்கிறார் என்பதற்கு சரணத்தின் முடிவில் வரும் ‘என் பாட்டும், உன் பாட்டும் ஒன்றல்லவோ’ என்ற வரியைக் கேட்டால் நமக்குப் புரியும்.
jency
நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, ஜென்ஸிக்கும் நாகர்கோவில்காரர்கள் போலவே பெரிய ‘ற’ ரொம்பப் பிடிக்கும். ‘ஆயிறம் மலர்களே, மலறுங்கள்', 'இறு பறவைகள் மலை முழுவதும்’ போன்ற பாடல்கள் உதாரணங்கள். மற்றவைகளிலும் ஜென்ஸியின் குரலில் பெரிய ‘ற’வைக் கேட்டு மகிழலாம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இளையராஜாவைப் பற்றிச் சொல்லும்போது கூட ‘றாஜா ஸார்’ என்றே மரியாதையுடன் அழுத்திச் சொன்னார். ஆனால் ஜென்ஸியின் இந்த ‘ற’ குறையையும் மீறி அவரது குரல் நம்மை ரசிக்க வைத்தது. ‘நிறம் மாறாத பூக்கள்’ திரைப்படத்தின் ‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே’பாடலின் துவக்கம் முதல் இறுதிவரை உணர்ச்சிபூர்வமாகப் பாடி அந்தப் பாடலின் ஆன்மாவை நம் மனதுக்குள் செலுத்திய ஜென்ஸியை என்ன சொல்லி பாராட்டுவது?
காதல் ஏக்கத்தில் பாடும் இளம்பெண்ணின் குரலுக்கு அந்தக் காலகட்டத்தில் இளையராஜா பெரும்பாலும் ஜென்ஸியின் குரலையே தேர்ந்தெடுத்தார். மிக எளிமையான மெட்டுதான் என்றில்லை. பாடுவதற்கு சிரமமான பாடல்களையும் துணிந்து ஜென்ஸிக்கேக் கொடுத்தார். அப்படி ஒரு சிரமமான மெட்டு, ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் ‘அடி பெண்ணே’ என்னும் பாடல். துவக்கமே உச்சஸ்தாயியில். பின்னர் சரணத்தின்பல இடங்களில் பல ஊர்களுக்குச் சென்று பின் பத்திரமாக வீடு திரும்ப வேண்டிய கட்டாயம். கொஞ்சம் அசந்தாலும் வண்டி தடம் புரண்டு விடக்கூடிய அபாயமுள்ள மெட்டது. பயமறியா இளங்கன்றாக ஜென்ஸி அந்தப் பாடலை மிகச் சரியாகவே பாடியிருப்பார்.
‘அடி பெண்ணே’ பாடலுக்கு நேரெதிர் திசையிலுள்ள மற்றுமொரு தனிக்குரல் பாடலை ஜென்ஸிக்குக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடலை, தான் பின்னால் அமைக்கப் போகும் ஓர் அற்புதமான மெட்டுக்கான முன்னோட்ட முயற்சியாக இளையராஜா செய்து பார்த்திருப்பாரோ என்ற ஐயம் எனக்குண்டு. ’அன்னக்கிளி’ இயக்குனர்களான தேவராஜ்-மோகனின் இயக்கத்தில் வெளியான ‘பூந்தளிர்’ திரைப்படத்தின் ’ஞான் ஞான் பாடணும்’ என்ற பாடலை கீரவாணி ராகத்தில் அமைத்த இளையராஜா, பிற்பாடு ‘ஜானி’ திரைப்படத்தின் ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடலை அமைப்பதற்கான யோசனையை, இந்த ‘பூந்தளிர்’ பாடலிலிருந்துதான் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பாடலை தன் தாய்பாஷையில் பாடியிருப்பதால் பெரிய ‘ற’ சிக்கலில்லாமல் அருமையாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. தான் பாடிய மற்ற தமிழ்ப்பாடல்களைவிட ’ஞான் ஞான் பாடணும்’ பாடலில் கட்டவிழ்க்கப்பட்ட சுதந்திரக் குரலில் அவர் பாடியிருப்பதை நம்மால் கவனிக்க முடியும். அதுவும் இந்தப் பாடலின் தாளத்தைப் பற்றியும், வயலின் மற்றும் புல்லாங்குழல் போன்ற இசைப்பகுதிகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் தனியாக இன்னொரு கட்டுரைதான் எழுதவேண்டி வரும்.
ஜென்ஸியின் பாடல்களைச் சொல்லும் போது ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப ஒவ்வொரு விருப்பப் பாடலைச் சொல்வார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக அந்தக்கால இளைஞர்கள் பலரின் ஓட்டுகளைப் பெற்று Unopposedஇல் ஜெயித்த பாடல் ஒன்று உண்டென்றால் அது ‘உல்லாசப் பறவைகள்’ திரைப்படத்தின் ‘தெய்வீக ராகம்’ பாடல்தான். ஜென்ஸியின் பாணியில் சொல்வதாக இருந்தால் ‘தெய்வீக றாகம்’. காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு கேட்டாலும் இந்தப் பாடலை ‘ஓ’வென்று எங்கோ வெளியூரிலிருந்து ஜென்ஸி துவக்கிப் பாடுவதைத்தான் நம்மால் கேட்க முடியும். சரணத்தில் ‘செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு’ என்று ஜென்ஸி பாடும் போதெல்லாம் செந்தாழம்பூவின் வாசனையை நான் நுகர்ந்திருக்கிறேன். ‘பாராட்ட வா, நீராட்ட வா, நீ நீந்த வா என்னோடு, மோகம் தீருமே’ என்று ஜென்ஸி அழைக்கும் போது உடனே போய் தலைகுப்புற அந்த நீரில் குதித்து விடத் தோன்றியிருக்கிறது. நிற்க. முழுக்க முழுக்க இதன் இசையையும், ஜென்ஸியின் பாடுமுறையையும் வைத்தே இதை சொல்கிறேன். இந்தப் பாடலின் காட்சியில் அடக்க ஒடுக்கமாக ஆற்றங்கரையில் புடவையை அவிழ்த்து முகம் கழுவும் தீபாவுக்கும், எனது இந்த அபிலாஷைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.


பெரும்பாலும் உச்சஸ்தாயியில் பாடும் பல பாடல்களை ஜென்ஸி பாடியிருக்கிறார் என்றாலும் ‘அன்பே சங்கீதா’ திரைப்படப்பாடலான ‘கீதா சங்கீதா’ என்னும் பாடல் குறிப்பிடத்தக்கதொரு ஜென்ஸியின் பாடல். Under rated பாடகரான ஜெயச்சந்திரனுடன் இணைந்து ஜென்ஸி பாடியிருக்கும் இந்தப் பாடலை ‘லாலாலலலா’ என்று மழலையாக ஜென்ஸி துவக்குவார். அதைத் தொடர்ந்து ‘கீ . . .தா . . .’ என்று உச்சஸ்தாயியில் ஜெயச்சந்திரன் பாடலைத் துவக்கிப் பாடுவார். பல்லவி முடிந்து சரணம் முடியும் போதுதான் ‘கண்ணா’ என்று ஜென்ஸி வந்து இணைவார். கொஞ்சம் கூட பதற்றமில்லாமல், பிசிறில்லாமல் ஜென்ஸி துவக்கும் விதத்தையும், ஜெயச்சந்திரனுக்கு சற்றும் சளைக்காமல் அடுத்த சரணத்தில் ‘பலஜென்மம் பிறந்தாலும் உன்வாசல் தேடும் உறவல்லவோ’ என்று ஜென்ஸி பாடியிருக்கும் முறையையும் கேட்டுப் பாருங்கள்.
வேடிக்கைப் பாடல்களையும் ஜென்ஸி பாடாமலில்லை. ‘மெட்டி’ திரைப்படத்தின் ‘கல்யாணம் என்னை முடிக்க’ என்னும் பாடலை அனுபவித்துப் பாடியிருப்பார். படுவேகமாக அதன் சரணத்தை முடித்து பல்லவியுடன் போய் இணையும் இடமொன்று இருக்கிறது. ‘ரயில் வரும் வழியினில் தோரணம் ஆடணும், இதுவும் எனது இனியமனது விரும்புவது’ என்று துரிதகதியில் பாடிய ஜென்ஸியேதான், இதே போல படுவேகமாகத் துவங்கக்கூடிய ஒரு பாடலையும் பாடினார். கரஹரப்ரியா ராகத்தில் மெட்டமைக்கப்பட்ட ‘பூ மலர்ந்திட’ என்று துவங்கும் ‘டிக் டிக் டிக்’ படப்பாடல்தான் அது. இதுபோன்ற ராகங்களின் அடிப்படையில் மெட்டமைக்கப்பட்ட பாடல்களில் ஜென்ஸியின் குரலில் வெளிவந்த முக்கியமானதொரு பாடல், ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் ‘தம்தன நம்தன’ என்னும் பாடல். ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை ஜென்ஸி, மற்றொரு பாடகியான வசந்தாவுடன் இணைந்து பாடியிருந்தார். மோகன ராகத்தில் அமைந்த, பெரும்புகழ் பெற்ற, ‘மீன்கொடித் தேரில்’ என்னும் ‘கரும்புவில்’ படப்பாடலை ஆண்குரலில் யேசுதாஸும், பெண்குரலில் ஜென்ஸியும் பாடியிருந்தார்கள்.
’பகலில் ஓர் இரவு’ திரைப்படத்தின் ‘தோட்டம் கொண்ட ராசாவே’ மற்றும் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் ‘வாடி என் கப்பக்கிழங்கே’ போன்ற நையாண்டிப் பாடல்களை இளையராஜாவுடன் இணைந்து பாடிய ஜென்ஸி, கடைசியாக தமிழில் பாடிய பாடலும் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படப்பாடல்தான். அதற்கு முன்பே இளையராஜாவுடன் இணைந்து ‘ஈரவிழிக்காவியங்கள்’ திரைப்படத்தின் ‘என் கானம்’ என்னும் பாடலைப் பாடியிருக்கிறார். கிடாரிஸ்டுகளின் விருப்பப்பாடல் அது. ஆனால் இளையராஜா பாடிய டூயட்களில் இன்றளவும் சிறப்பான ஒன்றாக ’அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் அவர் ஜென்ஸியுடன் இணைந்து பாடிய ’காதல் ஓவியம் பாடும் காவியம்’ பாடல்தான் கருதப்படுகிறது. அந்தப்பாடலின் சரணத்தில் ‘தாங்குமோ என் தேகமே, மன்மதனின் மலர்க்கணைகள் தோள்களிலே’ என்ற வரிகளை ஜென்ஸி பாடுகிறார். அதை கேட்கும் போது நமக்கு விரசமாகத் தோன்றாததற்குக் காரணம், அதன் இசை மட்டும் காரணமல்ல. அந்த வயதுக்கேயுரிய ஜென்ஸியின் வெகுளியான,விகற்பமில்லாத குரலும்தான். மலாய் பாஷையில் துவங்கும் ‘ப்ரியா’ படப்பாடலான ‘என்னுயிர் நீதானே’பாடலை ஜென்ஸியின் குரலில் கேட்கும் போது யாரோ ஒரு சிங்கப்பூர் பெண்தான் பாடியிருப்பதாகவே நமக்கு தோன்றும் அளவுக்கு ஜென்ஸியின் குரல் அந்த மலாய் நடிகைக்குப் பொருத்தமாக இருந்தது.
கிடார் வாசிப்பவர்கள் கொண்டாடும் மற்றொரு பாடலையும் ஜென்ஸி பாடியிருக்கிறார். கிராமியப் பின்னணியில் அமைந்த இந்தப் பாடலை கிடாரின் துணையுடன் அட்டகாசமாக மெட்டமைத்திருப்பார் இளையராஜா. அவ்வளவாக அறியப்படாத அந்தப் பாடல் ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ‘ஆத்தோரம் காத்தாட’என்று துவங்கும் அந்தப் பாடலை நீந்திக்கொண்டே பாடியிருக்கிறாரோ என்று நாம் சந்தேகிக்கும் வண்ணம் பாடியிருப்பார் ஜென்ஸி. அவர் பாடி அதிகம் அறியப்படாத இன்னொரு பாடல், ‘வட்டத்துக்குள் சதுரம்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆடச் சொன்னாரே’ என்ற க்ளப் வகைப் பாடல். அந்தப் பாடல் ஜென்ஸிக்காவது ஞாபகம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
ஆனால் இத்தனை பாடல்களையும் தாண்டி, இன்றும் ஜென்ஸிக்கு ஓர் அடையாளமாக விளங்கும் பாடலென்றால் ‘ஜானி’ படத்தில் இடம்பெற்ற ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’ என்ற பாடல்தான். இன்றும் கூட ஜென்ஸியைக் குறித்து அதிகம் அறியாதவர்களிடம், ‘என் வானிலே’ பாட்டைப் பாடியவர் என்று சொன்னால், ‘அந்தப் புள்ளையாடே’ என்று முகம் மலர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. இப்பாடலின் திரைவடிவில் பியானோவை இசைத்துக் கொண்டே ஸ்ரீதேவி பாடுவார். பாடலின் சரணம் முடியும் இடமான, “வார்த்தைகள் தேவையா?” என்பதைத் தொடர்ந்து வரும் ஆலாபனை மிகவும் சிரமமான ஒன்று. இந்தப் பாடல் பலருக்கு விருப்பமான ஒன்றாக இருந்தாலும், பொது மேடைகளில் இதைத் தெரிவு செய்து பாடுவதற்குத் தயங்குவதற்கான காரணம் தலை குப்புறக் கவிழ்த்துவிடும் அந்த ஆலாபனைதான். எந்தப் பிசிறும் இல்லாமல், சிரமமான இடம் போலவே தெரியாதபடி வெகு அநாயசமாக அதைக் கடந்து சென்றிருப்பார் ஜென்ஸி. இத்திரைப்படம் வெளியானபோது பாடல்களுக்காவும், பாடல்களை சிறப்பாகக் காட்சிப்படுத்தியததற்காகவும்இத்திரைப்படத்தைத் தமிழகமே கொண்டாடியது. செண்பகத்தக்காவுக்கும் இப்பாடல் மிகவும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ஒலிபரப்பாகும் பாடலுடனே இணைந்து பாடும் செண்பத்தக்கா, ‘என் வானிலே’ பாடலை மட்டும் அது முடிந்த பிறகும் பாடிக்கொண்டிருப்பார். ‘நீரோடை போலவே என் பெண்மை’ என்ற வரியை மெல்லிய குரலில் பாடும் போது செண்பத்தக்காவின் கண்கள் கலங்கி நிரம்பி நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.
இப்போது செண்பகத்தக்காவின் வீடு இருந்த இடத்தில் உயரமாக ஒரு புதிய கட்டிடம் நிமிர்ந்து நிற்கிறது. செண்பகத்தக்கா எங்கு, எப்படி இருக்கிறாள் என்ற தகவலில்லை. ஆனால் செண்பகத்தக்காவை ஞாபகப்படுத்துகிற ஜென்ஸி கேரளாவில் இசையாசிரியையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு நாள் போய்ப் பார்க்க வேண்டும்.


2 கருத்துகள்: