செவ்வாய், ஜனவரி 03, 2012

சொதி சாப்பிட வாரியளா?



(முன்குறிப்பு: 2 நாளைக்கு முன்னாடி சொதி செய்முறை இங்க போட்ட ராசி, இன்று நம்ம வீட்டுல மதியம் சொதி! அதன் படங்கள் இங்கே - சொதி, உருளை பொடிமாஸ் மற்றும் இஞ்சி பச்சடி!)..இனிமேல் படிங்க!


திருநெல்வேலியில் அல்வாவிற்கு அடுத்த படியா (நாமளே சொல்லிக்க வேண்டியது தானே!) "உலகப் புகழ்" பெற்ற சைவ உணவு  சொதி எனப்படும் தேங்காய்ப்பால் குழம்பு ன்னு சொல்லலாம். இது சூடான சாதத்துடனும் இடியாப்பம் (சேவை) , ஆப்பம் உடனும் நன்றாக இருக்கும். இதைப் பற்றி,  திருநெல்வேலித் தமிழில் அருமையாக எழுதி வரும்  வேணுவனம்சுகா அவரது பதிவுகளில் ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார். அதைப் படிக்க இங்கே செல்லவும். 

தேங்காய்ப் பாலில் செய்யப் படுவதால் அதனுடன் எப்பொழுதும் இஞ்சிப் பச்சடியும் பரிமாறப் படும். இது போக இதற்கு நல்ல சைடு டிஷ் உருளைக் கிழங்கு சிப்ஸ்..அதற்காக $1, $2 க்கு வால்மார்ட்டில் கிடைக்கும் சிப்ஸ் ன்னு நினைச்சிராதீங்க..வீட்டில் செய்யப்படும் சூடான, சுவையான சிப்ஸ்! அது செய்வது அவ்வளவு சுலபம் இல்லாததால் அதற்கு மாற்றாக உருளை காரப் பொடிமாஸ் செய்வது வழக்கம். சொதி  செய்முறை விளக்கம் (உபயம் எனது மனைவி!) இங்கே!
சொதி செய்ய:  
தேவையானவை: 
தேங்காய்ப் பால் - ஒரு முழு தேங்காயில் இருந்து (அல்லது) ஒரு can தேங்காய்ப்  பால் (500 ml போல)
காரட், உருளை, முருங்கைக்காய் - ஒவ்வொன்றும் ஒன்று
முந்திரிப் பருப்பு - 15-25 
வெள்ளைப் பூண்டு - 10 (இதைப் பிடிக்காது என்றால் விட்டு விடலாம்)
இஞ்சிச் சாறு - 100 ml போல
எலுமிச்சைச் சாறு - 4 ஸ்பூன் அளவில்
பயத்தம்பருப்பு (moong dal) - 2 ஸ்பூன் அளவில் (வேக வைத்தது) 
உப்பு - தேவையான அளவு 
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் குறைந்த அளவில் நீர் வைத்து அனைத்து காய்கறிகள் (1" அளவில் நறுக்கியது) மற்றும்  முந்திரிப் பருப்பை (பூண்டு சேர்ப்பதாக இருந்தால் அதையும்) வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய்ப் பாலையும் சேர்த்து கொதிக்கும் முன் (5 நிமிடம் போல) வேகவைத்த பயத்தம்பருப்பை சேர்த்து இறக்கி விடவும். சற்று ஆறியவுடன் இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். (கவனிக்க: தேங்காய்ப் பால் கொதித்தாலோ, இஞ்சி/எலுமிச்சைச் சாறுகள் சூட்டுடன் சேர்க்கப் பட்டாலோ, குழம்பு திரிந்து தயிர் போல் ஆகி விடும்). 

இஞ்சிப் பச்சடி:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில்  பொடியாக நறுக்கப் பட்ட இஞ்சி (100 கிராம் அளவில்), சிறிது பெருங்காயம், 3 மிளகாய் வத்தல் போன்றவற்றை வதக்கிக் கொள்ளவும். நன்கு வதங்கிய பிறகு, இவற்றை சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை போன்றவற்றை வாணலியில் தாளித்து விட்டு, அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்த உடன் இறக்கலாம்.

செய்து பார்த்து விட்டு மறக்காம இங்க வந்து சொல்லுங்க..!!!

பி.கு: சொதியில் இஞ்சி தவிர வேறு காரம் எதுவும் இல்லாததால், இஞ்சிப் பச்சடியை நன்கு காரமாக செய்து கொள்ளவது நல்லது!
பி.பி.கு: முந்திரிப் பருப்பு, தேங்காய்ப் பால் எல்லாம் போட்டால் அது dessert மாதிரி அல்லவா இருக்கும், நீ குழம்பு ன்னு சொல்லுறயே ன்னு ஒரு கும்பல்  அடிக்கடி எங்கிட்ட கேள்வி கேட்பாங்க..அவங்களும் செய்து பார்த்து சொல்லலாம்...:-)
http://arumaiyanaerumai.blogspot.com/2010/01/blog-post_2368.html

chokka naaku ooruthale?
msk

5 கருத்துகள்: