வெள்ளி, மே 18, 2012

பெரு வாழ்வு

பெரு மழை நாட்களில்
மலையாள ஓடு வேய்ந்த
கூரை விரிசலில்
ஒழுகும் நீர் .....
அவ்வபோது உரிமையுடன்
வீட்டிற்குள் வந்து
உறவாடிச் செல்லும் அணில்கள்....
நிரந்தரமாய் கூடு கட்டி வசித்த
சிட்டு குருவிகள்....
இரவுப் பொழுதுகளில்
சுவற்றில் மோதாமல்
லாகவமாய்த் திரும்பும்
வௌவால்கள் ....
வீட்டிற்குள் கசியும்
கோடை வெப்பம்
ஆடிக் காற்று
டிசம்பர் குளிர் ...
குடி தண்ணீருக்கு
பிள்ளையார் கோயில் கிணறு .
குளிப்பதற்கு பம்ப்பு செட்டு
அம்மன் கோவில்
தண்ணீர் சிலிர்ப்பில் குளத்து கரை
வைக்கோற் போர்கள்
வாய்க்கால் மேடு
பள்ளி நேரம் முடிந்த பின்
புழுதிக் குளியலில்
புரண்ட தருணங்கள்
எப்போதேனும்
நகராட்சி பொருட்காட்சியில்
பஞ்சு மிட்டாய்
மைசூர் அப்பளம் .....
இலங்கை வானொலி
நேயர் விருப்பங்கள் .
கோவில் கொடைகளில்
அலறும் கிராமபோன்...
வருடத்திற்கு சில
திரைபடங்கள்
என வாழ்வின்
ஆரம்ப அத்தியாயங்கள்
நகர்ந்த போது
இருந்தது உயிர்ப்பும் துடிப்பும்,

பெரு நகரங்களின்
காங்க்ரிட் காடுகளில்
குளிர் சாதன விடுதிகளில்
தொலைக்காட்சியின்
இருபத்திநான்கு மணி நேரக்
கேளிக்கைகளில்
எப்போது வேண்டுமானாலும்
இலவசமாய்ப் பதிவிறக்கம் செய்து
கேட்க முடிகிற சங்கீதங்களில்
யு டியுபில் பேஸ் புக்கில்
தெருவெல்லாம் மலிந்து போன
வாகன இரைச்சல்களில்
புட்டித் தண்ணீரில்
கோக்கில் பெப்சியில்
ஷாபிங் மால் ஆரவாரங்களில்
ஷாம்பெயின் கொண்டாட்டங்களில்
உறக்கம் தவிர்த்த உல்லாசங்களில்
கைக்குள் அடங்கிய
டிஜிட்டல் உலகத்தில்
அறுபதில் அடைந்ததை
இருபதில் எட்டி .
உழைக்கும் வாழ்க்கை
ஓடிக் கொண்டே.....
...
உயிர் மட்டும்
வாழ்ந்து கொண்டிருக்கிறது..
சொக்ஸ்

3 கருத்துகள்:

  1. மிக மிக அருமை!
    இளமைப்பருவ மற்றும் இன்றைய
    வாழ்கையை அப்படியே கவிதையில்
    வடிவமைத்திருக்கிறார்.
    நன்றி-சொக்ஸ்!

    பாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டஞ்சோறு, கடலை மிட்டாய், கமர்கட்டு(சென்னை தமிழ்),கில்லி(கிட்டிப்புள்), வயற்காட்டில் திருடி தின்ற கடலை, பனை நுங்கு, ஓணான் வேட்டை இப்படி மறந்துபோன வசந்த காலங்களை கண்முன்னால் வர வைத்து ஏக்கப்பெரு மூச்சு விட வைத்த சொக்கனுக்கு நன்றி.

      கரையான்.

      நீக்கு
  2. Chocka - this is beautiful! I am very nostalgic now. One of the things I miss most is the sundal on the beach. The sundal always had some freshly grated coconut and mango pieces in a paper pottlam, Oh wow - isn't life all about simple pleasures that make it worth living?? Forget the money and the house and the car and the credit card debt..
    Gujili

    பதிலளிநீக்கு