புதன், ஆகஸ்ட் 24, 2011

லஞ்சம் பற்றி பல ஈ-மெயில்கள் வந்து விட்டன, நம்முடைய இன்பாக்ஸ் கொள்ளாத அளவுக்கு மெய்ல்கள் பார்த்து விட்டோம். அன்னா ஹசாரே அவர்கள் ஒரு சிறிய நம்பிக்கை ஏற்படுத்தினாலும் இதில் மேலே உள்ள அரசியல்வாதிகள் மட்டும்தான் ஊழலில் ஈடுபடுவது போலவும், கடைநிலையில் உள்ள அரசு ஊழியர்கள் ஏதோ மிக நல்லவர்கள் போலவும் காட்டிக்கொள்வது கொடுமை. இதில் சென்னையில் அண்ணா ஹஜாரே வுக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் சினிமாக்காரர்களும் வடநாட்டு வியாபாரிகளும்தான் அதிகம். இந்த வட நாட்டு வியாபாரிகளில்  குறிப்பாக பிராட்வேயில்  உள்ள நைனியப்ப நாயக்கன் தெரு, தேவ ராஜ முதலி தெருவில் உள்ள மருந்து கடைகளில் போலி மற்றும் கலப்பட  மருந்துகள் விற்பவர்கள் அதிகம். மேலும் இதில் எத்தனை பேர் சரியாக வருமான வரியும் விற்பனை வரியும் கட்டுகிறார்கள் என்று தோண்டி துருவிப்பார்த்தாலே இவர்கள் லட்சணம் தெரிந்து விடும். இந்த ஊழல்கள் மறைய வேண்டும் என்றால் மக்களிடமும் மாற்றங்கள் வர வேண்டும். RTO அலுவலகத்தில்  ஒரு வாரமோ பத்து நாட்களோ அலைந்து லைசென்ஸ்  வாங்கும் பொறுமை நம்மில் எத்தனை பேருக்கு உள்ளது. இதே துபாயில் அல்லது வேறு வெளிநாடுகளில் ஒரு மாதம் கூட அலைந்து திரிந்து வாங்க தயாராக இருக்கின்றோம். கோவிலுக்கு செல்லும்போது கூட எனக்கு அவரை தெரியும், நான் இன்னார், இன்னாருக்கு வேண்டப்பட்டவன் என்று கூறி தரிசனத்தை விரைந்து முடிப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம்.
         சில முட்டாள்தனமான, காலத்திற்கு ஒட்டாத சட்டங்களும் ஊழலுக்கு வழி வகுத்து விடுவதுண்டு. சமீபத்தில் என்னுடைய  
 மனைவியின் பிறந்தகத்தில் சில தேக்கு மரங்களை வெட்ட வேண்டியிருந்தது. இது என்ன உங்கள் வீட்டு மரம் வெட்டி தள்ள வேண்டியது தானே என்று உங்கள் மனதில் தோன்றலாம். வீட்டில் உள்ள தேக்கு மரம் உங்களுடையதாக இருந்தாலும் அரசு அனுமதி பெறாமல் வெட்ட இயலாது.  இதற்கு சில நடைமுறைகள் உள்ளன, உங்கள் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெறாமல் உங்கள் இஷ்டத்திற்கு வெட்டிவிட இயலாது.  முதலில் உங்கள் வீடு அமைந்துள்ள பகுதியின் வரைபடம் மற்றும் மரத்தின் அளவு, பத்திரம், பட்டா,வரி ரசீது  ஆகியவற்றை வைத்து உங்கள் பகுதி கிராம அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் அவர் வந்து அந்த மரம் உங்களுடையதுதான் என்றும், மரத்தின் அளவுகளையும் குறித்து சான்றிதழ் வழங்குவார், பின்னர் அதனை 
உங்கள்  பகுதி வனத்துறையிடம் உரிய விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க
வேண்டும், அவர்கள் அந்த விண்ணப்பத்தை மாவட்ட வன அலுவலகரிடம்
சமர்ப்பித்து அவர்கள் அந்த மரங்களை பார்வை இட்டு அனுமதி வழங்குவார்கள், பின்னர் அந்த மரங்கள் வெட்ட அனுமதி வழங்கப்படும், வெட்டிய பின்னர் திரும்பவும் வனத்துறையினர் வந்து அவர்களுடைய முத்திரை வைப்பார்கள் அதன் பின்னர்தான் நீங்கள் உங்கள் இடத்திலிருந்து மர அறுப்பு பட்டறைக்கு எடுத்து சென்று உங்கள் தேவைக்கு ஏற்றவாறு பலகையாகவோ சட்டமாகவோ அறுத்து கொள்ள முடியும். இதுதான் சட்டப்படியான நடைமுறை. இந்த நடைமுறைகள் முடிய குறைந்தது மூன்று மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம், அதற்கு மேலும் கூட ஆகலாம்.  எத்தனை பேர் இந்த கால அளவுக்கு காத்திருப்பார்கள். மேலும் இதில் உள்ள சிக்கல் என்ன வென்றால், இந்த மரங்களை வெட்டுவதே, அதன் வேர்கள்  அருகில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் விரிசல்கள் ஏற்படுத்தி வருகின்றன, இதனால் கட்டடத்திற்கு ஆபத்து, உடனே மரம் வெட்டப்படவேண்டும் என்பதால்தான். மேலும் கடந்த ஆண்டு பெய்த மழையில் நான்கு மரங்கள் சாய்ந்து பக்கத்து வீட்டு மதில் சுவரை உடைத்ததற்காக அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டும் அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த மரங்களை வெட்ட எண்ணினோம். சென்ற ஆண்டில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதற்காக கிட்ட தட்ட ஆறு மாதங்கள் அலைந்து அனுமதி வாங்கியது தனிக்கதை. ஆக இந்த நிலையில் சட்டப்படி பொறுமையாக செய்தால் ஏற்படும் நேர விரயம் மட்டுமல்லாமல் கட்டிட சேதாரமும், பக்கத்து வீட்டு பகையும் பயமுறுத்துகின்றன.
      இந்த மரங்களை வெட்ட இந்த ஆண்டில் விண்ணப்பித்துள்ளோம், கிராம நிர்வாக அதிகாரிக்கு இருநூறு ரூபாய் கொடுத்தது பத்தாமல் நானூறு ரூபாய் கொடுத்த பின்னர்தான் பத்து நாள் இழுத்தடித்து வந்து மரங்களை பார்வை இட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார், அடுத்து வனத்துறையிடம் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகி விட்டது, அடுத்த மழைக்காலமும் தொடக்கி விட்டது, ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு மழை காற்றில் மரம் சாய்ந்து பக்கத்து வீடு மதில் சுவரை உடைக்க கூடாது என்று பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை....

(ஆகவே சொக்கன் அனுப்பிய லஞ்சத்திற்கு எதிரான செய்தியை தெரிந்தவர்க்கு அனுப்ப எனக்கு தகுதி இல்லாததால் நான் யாருக்கும் அனுப்பவில்லை)

கரையான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக