வியாழன், ஆகஸ்ட் 09, 2012

உளறல்கள் ....

சமீபத்தில் படித்த மது மயக்கம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்

சிலர் சரக்கு அடிக்கும்போது தயிர்வடை சாப்பிடுவார்கள். போதை நின்று நிதானமாக ஏறுமாம். சிலருக்கோ தண்ணீர் கலக்காத மதுவுடன் சின்ன வெங்காயம் வேண்டும். ''மாப்ளே.. ச்சும்மா, தேள் கடிச்சது மாதிரி 'சுருக்’னு போதை ஏறும் தெரியும்ல'' என்பார்கள். இதற்கு தேளே கடித்து இருக்கலாம். பெரிய வெங்காயம் கடித்துக்கொண்டால், போதை ஏறவே ஏறாதாம். இது எல்லாமே தப்பு. மதுவை எப்படிக் குடித்தாலும் போதை ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து கூடவோ, குறையவோ ஏறித்தான் தீரும்.

ஒரு குவார்ட்டர் குடித்து விட்டு, சரவண பவனில் சூடாக ஒரு காபி குடித்தால் போதை இறங்கிவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலரோ, குடித்த பிறகு தெருத்தெருவாகக் கொய்யா மரத்தைத் தேடி அலைந்து, கொழுந்து இலைகளாகப் பறித்து ஆடு, மாடுபோல அசை போடும் காமெடியும் நடக்கும். வாடை வராதாம்!
மது குடிப்பது தொடர்பாக 'குடிமகன்’களிடம் இப்படி எத்தனை எத்தனை தவறான நம்பிக்கைகள். மதுவைக் குடித்து விட்டால் குறிப்பிட்ட நேரத்துக்குப் போதையைப் போக்கவோ, வாடையை மறைக்கவோ முடியாது என்பதுதான் மருத்துவ உண்மை. ஆல்கஹால் நெடி, குடித்தவரின் மூச்சுக்காற்று வழியாக வெளியேறுகிறது. அதனால்தான், போலீஸார் வாயை ஊதச்சொல்லி ஸ்பீடா மீட்டர் போன்ற கருவியை நீட்டுகிறார்கள். மதுவின் நெடி பட்டால், அந்தக் கருவியில் இருக்கும் முள்​ளுக்கே போதை ஏறியதைப்போல மயங்கிக் கீழே சறுக்கும். ஒரு லார்ஜ் மதுவின் போதையையோ அல்லது வாடையையோ போக்க ஒருவரின் உடல் உறுப்புகளுக்கு ஒரு மணி நேரம் தேவை. இதை மாற்றவோ, மறைக்கவோ முடியவே முடியாது.
ஹாட் வகையறாக்களைக் குடித்தால்தான் உடலுக்குக் கெடுதல். பீர், ஒயின் சமாச்சாரங்கள் உடலுக்கு நல்லது அல்லது கெடுதல் இல்லை - இப்படியும் பலர் நினைக்கிறார்கள். இதுவும் தவறு. ஆல்கஹால் ஓர் அழிவு சக்தி என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அது ரத்தத்தில்  ஊடுருவும் அளவான 'பி.ஏ.சி’-யை பொறுத்து, உடலுக்கு அது கெடுதல் செய்தே தீரும். ஒரு பீர் பாட்டிலில் இருக்கும் திரவத்தின் அளவுக்கு அதில் இருக்கும் சுமார் எட்டே முக்கால் சதவிகிதம் ஆல்கஹாலின் அளவு சரியானதே. ஹாட்டில் தண்ணீரோ, சோடாவோ கலந்து குடிக்கிறார்கள். பீரை அப்படியே குடிக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி மதுவில் எது நல்லது என்று ஆராய்ச்சி செய்வது எல்லாம் சாக்கடையில் சங்கீதத்தைத் தேடுவது போலத்தான். டாக்டர்கள் சொல்வார்கள், 'எ டிரிங்க் இஸ் எ டிரிங்க் இஸ் எ டிரிங்க்’ என்று. குடி என்பது குடியேதான்!
  மது குடித்தால் நன்றாகத் தூக்கம் வரும் - எவ்வளவு பெரிய மோசடி வார்த்தை தெரியுமா இது! எப்போதாவது... மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மது அருந்தும் நபர்களிடம் கேட்டுப் பாருங்கள். மது அருந்திய அன்று தனக்கு சரியான தூக்கம் இல்லை என்பார்கள். மது அருந்தினால் தூக்கம் வராது. மயக்கம்தான் வரும். அதுவும், 'நல்ல’ தூக்கத்துக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. எப்படி?
பொதுவாக, அனைவருக்குமே தூங்கி எழும்போது உடலில் நீர் வற்றிப்போய் இருக்கும். இதை டிஹைடிரேஷன் (Dehydration) என்பார்கள். அதனால்தான் தூக்கத்தில் எழுந்து தண்ணீர் குடிக்கிறோம். அப்படிக் குடித்தும் போதாமல் காலையில் எழுந்ததும் மடக் மடக்கு என்று ஒரு சொம்பு தண்ணீரைக் குடிக்கிறோம். மது குடிக்காத நபருக்கே இப்படி என்றால், ஒருவர் மது குடித்துவிட்டுப் படுத்தால்? உடலில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்டி இழுத்து, வற்றச் செய்யும் தன்மை ஆல்கஹாலுக்கு உண்டு. உடல் வறண்டு, குடல் வறண்டு... நாடி, நரம்பு, நாக்கு எல்லாம் வறண்டு தாகத்தில் தவிப்பார்கள்.
போதை மயக்கத்தில் ஆழ்ந்து இருக்கும்போது எழுந்து தண்ணீர் குடிக்கவும் தோன்றாது. மது குடித்த அந்த ஆத்மாவை விடுங்கள். அது மயங்கிக்கிடக்கிறது. ஆனால், அந்த ஆத்மாவின் உடல் சுமார் எட்டு மணி நேரம் படும்பாடு, பெரும் அவஸ்தை. அதுவும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் மூக்கு வழியாக மூச்சுவிட மாட்டார்கள். அஷ்டக்கோணாலாக வாயைத் திறந்து கொர்... புர்... என்று திணறித்திணறித்தான் மூச்சு விடுவார்கள். இதனால், வழக்கத்தைவிட அதிகமாக டிஹைடிரேஷன் ஏற்படும். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து மதுப் பழக்கம் இருப்பவர்களுக்கு மயக்கத்தில் நிறையக் கெட்ட கனவுகள் வரும். குறிப்பாக, கனவுகளில் கொடூரச் சம்பவங்கள் நடக்கும். இப்போது சொல்லுங்கள். குடித்துவிட்டுப் படுத்தால் நல்ல... ஆழ்ந்த... நிம்மதியான தூக்கம் வருமா என்று!
நான்கு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து குடிக்கிறார்கள். அதில் வழக்கம்போல் ஒருவன் மட்டை ஆகிவிட்டான். மற்ற மூவரும் என்ன செய்வார்கள்? அவன் அப்படியே படுக்கட்டும்... விடு. தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று படுக்கவைத்து விட்டு கிளம்பி விடுவார்கள். இதில் என்ன தவறு என்று கேட்கலாம்... இதுதான் மிகப் பெரிய தவறு. ஒருவர் மட்டை ஆகிவிட்டால், அவர் போதையில் இருந்து மீண்டு எழும் வரை அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மிகைப்படுத்தவில்லை... பயமுறுத்தவில்லை...

மிகவும் அருமையான தொடர் ....

கரையான் 



2 கருத்துகள்:

  1. Hi Kumara
    this is not ularal at all you chose the right time for this wonderful article I am really worried about classmates-look at their BMI really worrying-as u rightly said no time for exercise/relaxation-work work and money money and want to enjoy life(drinking excessive alcohol!!!!!)that is the only thing they know about as enjoyment in life???? why
    In my opinion alcohol was a great factor in some of our friends demise-I would call them selfish enjoying themselves not even have any concern about their family -when they die the family suffers the most(Not fair at all)
    hope my friends would reconsider before touching alcohol again
    thanks Kumara please carry on advising
    atleast one of us would heed your advice thats for sure

    பதிலளிநீக்கு
  2. Face bookil இன்று கண்ட பதிவு.
    இது ஒரு சாம்பிள் தான், தினம் காணக் கிடைக்கிற குடிமகன்களின் கதைகள் ஏராளம்
    " நேற்று நள்ளிரவில் பஸ்சில் கோவை வந்துகொண்டிருந்தபோது அது நிகழ்ந்தது . . . ஒரு குடிகார இளைஞன் போதையில் திடீரென்று எழுந்து பஸ்ஸைவிட்டு இறங்க முயற்சிக்கிறான் . . . வண்டி 90 கிலோமீட்டர் வேகத்தில் . . . கூடே இருந்த பெண் இறங்கவிடாமல் இருக்க போராடினார். அனைவரும் திகிலில் உறைந்தனர். வண்டிய நிறுத்திய டிரைவர் எழுந்து வந்து அவனை கீழே இறக்கிவிட முயற்சித்தார் . . அந்த யுவதியும் இறங்கவேண்டிய சூழல். நான் தடுத்து நிறுத்தினேன். ஆள் அரவமற்ற இடத்தில் நிறுத்தினால் பாவம் ... அந்தப்பெண்ணுக்கு ஏதாவது ஆனால் நீங்கள் தான் பொறுப்பு என்று எச்சரித்தவுடன் . . . வண்டியைக்கிளப்பி ஊர் அருகே ஒரு தொழிற்சாலை வாசலில் இருவரையும் இறக்கிவிட்டு பயணித்தது வண்டி. குடியால் அந்தப் பெண்ணின் நிலை எவ்வளவு ஆபத்தானதாக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்துப் பார்த்தேன். மனம் கனத்தது ! ஆணின் சின்ன சின்ன சந்தோசங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ரிஸ்க்கை எதிர்கொள்வது பெண்களுக்கு நேரும் ஒரு தொடர்கொடுமை
    Chocks

    பதிலளிநீக்கு