வெள்ளி, அக்டோபர் 25, 2013

நண்பர் குமரவேல் .....PASUMAI VIKATAN.



எந்த விளைபொருளாக இருந்தாலும், அதை அப்படியே சந்தைப்படுத்தாமல் மதிப்புக் கூட்டி விற்றால்தான் அதிக லாபம் பார்க்க முடியும்' என்கிற விழிப்பு உணர்வு, விவசாயிகள் மத்தியில் பெருகி வரும் காலமிது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களிலும் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகளும், அதற்கான கருவிகள் பற்றிய விவரங்களையும் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள். 'பசுமை விகடன்’ கருவிகள் சிறப்பிதழுக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலைய மனையியல் துறை உதவிப் பேராசிரியை டாக்டர். விமலாராணியிடம் மதிப்புக்கூட்டும் கருவிகள் பற்றி கேட்டோம். அவர் தந்த தகவல்கள் இங்கே...
பனீர் அழுத்தும் கருவி
பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சைச் சாறு கலந்து விட்டால், பால் திரியும். அதை, காடா துணியில் வடிகட்டி, அத்துணியுடனே இக்கருவியில் சதுர வடிவில் இருக்கும் ஃபிரேமில் வைத்துத் திருகினால், தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு கெட்டியான பனீர் கிடைக்கும். இதைத் தண்ணீரில் கழுவி 'பேக்' செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். வட்ட வடிவ பனீர் தயாரிக்கும் கருவியும் இருக்கிறது. ஆனால், சதுர வடிவத்துக்குத்தான் வணிகரீதியாக விற்பனை வாய்ப்புகள் உள்ளன. இக்கருவியில் அதிகபட்சமாக 5 லிட்டர் பாலைப் பிழிய முடியும். 1 லிட்டர் பாலிலிருந்து 200 கிராம் வரை பனீர் கிடைக்கும். இக்கருவி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், துரு பிடிக்காது. இதன் விலை 2 ஆயிரத்து 500 ரூபாய்.
சேமியா பிழியும் கருவி
சேமியா தயாரிப்பதற்கான பொருட்களைக் கலந்து பிசைந்து, இக்கருவியில் வைத்து சுற்றினால், சேமியா வெளிவரும். இதை உலர்த்தி பேக் செய்யலாம். இக்கருவியில் சேமியாவின் தடிமனை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. தவிர, நீளமாகப் பிழியும் வசதியும் உள்ளது. இதன் விலை 2 ஆயிரத்து 500 ரூபாய்.
பிஸ்கெட் தயாரிக்கும் அடுமனை இயந்திரம் (பேக்கரி)
தேவையான மூலப்பொருட்களைக் கலந்து பிசைந்து, தேவைப்படும் வடிவ அச்சில் நிரப்பி... மின்சாரத்தில் இயங்கும் இக்கருவியில் உள்ள 'ட்ரே’யில் வைத்து இயக்கினால், அரை மணிநேரத்தில் பிஸ்கெட் தயார். உள்ளே சூடேறிக் கொண்டிருக்கும் பொருளின் நிறம் மாறுவதைப்  பார்க்கும் வகையில் கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் கேக்குகளையும் தயாரிக்க முடியும். இது 1,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில், பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது.  
மூடி போடும் இயந்திரம்
ரோஸ் மில்க், பாதாம் பால், குளிர்பானங்கள்... போன்ற திரவ வடிவப் பொருட்களை பாட்டில்களில் அடைத்து, அவற்றுக்கு தகர மூடி போட இக்கருவி பயன்படுகிறது. நாம் வைக்கும் பாட்டிலின் அளவுக்கு ஏற்ப மூடியின் அளவை மாற்றியமைக்கும் வசதியும் உண்டு. இதன் விலை 2 ஆயிரத்து 200 ரூபாய். ஊறுகாய் பாட்டில்களைக் காற்றுப் புகாதபடி அடைத்து மூடி போடுவதற்கான பிரத்யேகக் கருவியும் உள்ளது. இதன் விலை 2 ஆயிரத்து 600 ரூபாய்.
பேக்கிங் கருவி (Sealing Machine)
மஞ்சள், மிளகாய், தனியா, மிளகு, சீரகம் போன்ற பொருட்களை அரைத்து கிடைக்கும் பொடியை பேக் செய்யும் கருவி இது. இதன் மூலம் மிக எளிதாக பேக் செய்ய முடியும். இது 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில், பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது.
வெற்றிட பேக்கிங் போடும் கருவி (Vacuum Packing Machine)
காற்றுடன் சேர்த்தோ அல்லது காற்றை நீக்கியோ பேக் செய்ய, இக்கருவி பயன்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் இக்கருவியில் அதிகபட்சம் 5 கிலோ வரை அளவுள்ள பொருட்களை பேக் செய்ய முடியும். இதன் விலை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல்.
தேங்காய் துருவும் கருவி    தேங்காய் துருவல் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பர்பி உள்ளிட்ட பொருட்களுக்காக தேங்காயை துருவுவதற்கு, இக்கருவி பயன்படுகிறது. இதை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, தேங்காய் மூடியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, மறு கையில் கைப்பிடியை வேகமாக சுழற்றினால், துருவல்கள் கீழே கொட்டும். இதன் விலை 300 ரூபாய்.
மொத்தக் கருவிகள் மற்றும் அதற்கான விளக்கங்களை விமலாராணி சொல்லி முடிக்க...
''தொழில்முனைவோராக விரும்புபவர்கள், இதுபோன்ற மதிப்புக் கூட்டி விற்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு தொழி லில் இறங்கலாம். மகளிர் சுயஉதவிக் குழுவில் இருக்கும் பெண்களும் இதில் ஈடுபடலாம். இதற்கான பயிற்சிகளை எங்கள் மையத்தில் இலவசமாகவே தந்து வருகிறோம். அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அழைப்பு வைத்தார்... வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் குமரவேலு!
தொடர்புக்கு, 
வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.,
தொலைபேசி: 044-27452371,
செல்போன்: 99942-83960.
நண்பர் குமாரவேல் அவர்களை பாராட்டி சென்னை நட்சத்திரங்கள் அனைவரும் அவருடைய செல் பேசிக்கு ஓயாது missed call கொடுக்கவும்....

கரையான்.

1 கருத்து: