வியாழன், அக்டோபர் 04, 2012

பேராசை பெரு நஷ்டம்

 ஈமு கோழி, நாட்டு கோழி, கொப்பரை என்று தினுசு தினுசா ஆசை காட்டி மக்களை ஏமாத்திகிட்டே  தான் இருக்கானுங்க மக்களும் ஏமாந்து கிட்டேதான் இருக்காங்க...ஆன் லைன் டிரேடிங் -இல் முதலீடு செய்து உங்களின் பணத்திற்கு 8.5% வட்டி தருகிறோம், ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 8500 ரூபாய் கிடைக்கும் என்று அவன் கூறினால் முதலீடு செய்ய எப்படி புற்றீசல் போல மக்கள் புறப்படுகிறார்கள், பேராசைதான். இப்படி எல்லாம் உண்மையாக கிடைக்கும் என்றால் எங்களைப்போன்றவர்கள் ஏன் வெளி நாட்டில் சாணி அள்ளிக்கொண்டு இருக்கப்போகிறோம். ஐந்து லட்சத்தை முதலீடு செய்து விட்டு மாதம் மாதம் வட்டியை வாங்கி கொண்டு நிம்மதியாக உண்டு உறங்கி எழுந்திருக்க மாட்டோமா. ஒரு கோடி ரெண்டு கோடி என்பது போய்  இப்போதெல்லாம் ஐநூறு கோடி ஆயிரம் கோடிகள் தாண்டி இருபதாயிரம் முப்பதாயிரம் கோடிகளில் பித்தலாட்டம் நிகழ்ந்து கொண்டுள்ளது இதற்கெல்லாம் காரணம் பேராசை. இதில் படித்தவர் பாமரர் என்றெல்லாம் பேதம் இல்லை. படித்தவர்களிடம் ஆங்கிலத்தில் புரியாத விஷயங்களை சொல்லி ஏமாற்றுகிறார்கள், படிக்காதவரிடம் விளங்காத கணக்குகளை சொல்லி குழப்பி படிய வைக்கிறார்கள் இந்த ஏமாற்று காரர்கள்.
பேராசை கண்ணை மறைக்கும்  என்பார்கள், உண்மைதான் ஈமு  கோழி பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படும் பொழுதே கால்நடை மருத்துவ பல்கலை கழகம் துணை வேந்தர் பல பேட்டிகளில் இது சாத்தியமில்லாதது என்பதை பல இதழ்களில் விளக்கமாக கூறினார், ஆனால் அவர்கள் செய்த விளம்பரங்களும்,  அதுவும் நம்ம ஊருல சினிமாக்காரன் சொல்லி விட்டால் அதுதான் வேதம்  என்றென்னும் முட்டாள்களே அதிகம், விளைவு இப்போது முதலுக்கே மோசம். மக்களின் பலவீனத்தை சரியாக பயன் படுத்த தெரிந்தவர்கள் இந்த பித்தலாட்ட காரர்கள். பல ஆண்டுகளுக்கு முன்னரே தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக் ஆசை காட்டி பலரை ஏமாற்றிய சம்பவம் சென்னை நகரில் நடந்தது, அதில் ஏமாந்தவர்கள் பெரும்பாலானோர் மெத்த படித்தவர்கள், அரசு துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், அவர்களுடைய பணம் இது வரை கிடைக்கவில்லை, வழக்குகள் இன்னும் இழுத்துக்கொண்டே தான் உள்ளது. அதன் பிறகு தேக்கு மர வளர்ப்பு திட்டம், போரெக்ஸ் டிரடிங், இப்படி பல கவர்ச்சி திட்டங்கள் , கவர்ச்சியான நடிகர் நடிகைகளை வைத்து விளம்பர படுத்தி ஏமாற்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள் மக்களும் ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள். மக்களின் பேராசையே இவர்களின் மூலதனம்.

கரையான்.

1 கருத்து: