சமீபத்தில் பத்திரிக்கைகளில் மற்றும் தொலைகாட்சியில் பார்த்த ஒரு செய்தி மிகவும் மனதை புண்ணாக்கியது....
தைரிய லக்ஷ்மி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது, இந்த மாணவி மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து மிக கஷ்டப்பட்டு படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர், கிண்டி அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் பட்ட படிப்பு முதலாம் ஆண்டு மாணவி, ஆங்கில மொழியில் படிக்க கடினமாக இருப்பதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெயரில் தைரியம் இருந்து என்ன பயன்.
மற்றொரு மாணவர் அதே பல்கலை கழகத்தில் முதலாமாண்டு மாணவர் தர்மபுரி மாவட்டடத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று அண்ணா பல்கலை கழகத்தில் இடம் பிடித்தவர், அவர் என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வில்லை.இந்த மாணவர் ஒரு சிறந்த கவிஞரும் கூட, மேலும் இவர் குடும்பம் bonded labour- ஆக இருந்தவர்கள். அப்போதைய மாவட்ட ஆட்சியரின் உதவியால் பள்ளிப்படிப்பை தொடர்ந்து மாவட்டத்தின் சிறந்த மாணவராக இருந்தவர், மேலும் அந்த மாவட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் பல ஏழை மாணவர்களுக்கு உதாரணமாகவும் விளங்கியவர், இவருடைய குடும்பத்தினர் இன்றும் மிக ஏழ்மையான நிலையிலேயே உள்ளனர், ஓலை குடிசையில் வாழ்ந்து கொண்டு தினக்கூலிகள்-ஆய் காலம் தள்ளுபவர்கள். அவருடைய தாய் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்பவர்(single mother) இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தவர்,தற்கொலை செய்து கொள்ள பெரிய கஷ்டம் என்னவாக இருக்கும் என யாருக்கும் தெரிய வில்லை.
தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள் என்பதை விட சுய நலக்காரர்கள் என்பதுதான் என் கருத்து. இறப்புக்குப்பின் அவர்களின் குடும்பத்தின் துயர், தாய் தந்தையரின் சிதைந்து போகும் நம்பிக்கை என எதையும் இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை. இவ்வளவு நாட்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த தாய் தந்தை மற்றும் உறவுகளின் துயரங்களை எண்ணாதவர்கள் சுயநலக்காரர்களே. பட்டணத்தில் படிக்கும் குழந்தை நகரத்தில் உள்ளவர்கள் போல் இருக்க வேண்டும் என்று கடன் உடன் வாங்கி நல்ல துணி மணிகள், இன்ன பிற வசதிகள் செய்து கொடுத்த தாயின் நிலை என்னவாகும்...
கரையான்.