இலாபமில்லை என்ற சொல் பல இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது, அதுவும் விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த தொழில் செய்பவர்களில் பலர் உற்பத்தி செய்பவன் இழப்பையே சந்திக்க வேண்டியுள்ளது என்று புலம்புவது இப்போது வாடிக்கை ஆகி விட்டது. (நம்முடைய முக நூல் (face book ) பதிவில் கூட சொக்கன் கருப்பட்டி உற்பத்தியாளர்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தான்).
சென்றமாத இறுதி மற்றும் இந்த மாத தொடக்கத்தில் எங்கள் பண்ணையின் ஒரு வயது குதிரைகள் விற்பனை நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சவுதியில் உள்ள அனைத்து பண்ணையாளர்களின் ஒரு வயது குட்டிகளுக்கான விற்பனை நடக்கும், எங்கள் பண்ணையின் உற்பத்தியான 35 குட்டிகளும் கலந்து கொண்டன...விற்பனை மிக மோசமாக இருந்தது, உற்பத்தி விலையில் பாதி கூட கேட்கப்பட வில்லை(உலகளாவிய பொருளாதார மந்த நிலை?), நான் விற்பனை அரங்கில் உட்கார்ந்து கொண்டிருந்தேன், அப்போது ஏற்கனவே எனக்கு பழக்கமான ஒரு சவூதி காரர் என்னருகில் உட்கார்ந்தார், பெரிய பணக்காரர் ஒரு மில்லியன் டாலர் கொடுத்து கூட குதிரை வாங்குவார்(ஆனால் அதை மருத்துவம் செய்யும் மருத்துவருக்கு நூறு டாலர் கொடுக்க பத்து முறை பேரம் பேசுவார்) என்னிடம் மிக கோபமாக "உங்க முதலாளி என்ன எல்லா குதிரைக்கும் மில்லியன் எதிர்பார்க்கிறார், கொஞ்சம் குறைத்து விற்றால் என்ன அவரிடம் பணமா இல்லை " என்றார். நான் அவரிடம் "என் முதலாளி பணம் போடுகிறார் மிக விலை உயர்ந்த குதிரைகளை வெளி நாடுகளில் இருந்து வாங்கி வருகிறார் அவர் எதிர் பார்ப்பதில் என்ன தவறு " என்றேன். உடனே அவர் "பத்து மில்லியன் செலவு செய்து விட்டு இருபது மில்லியன் எதிர் பார்க்கிறார், அவர் எவ்வளவு விலைக்கு வாங்கினார் என்பது இணையதளத்தில் உள்ளதே" என்றார்.
நான் அவருக்கு விளக்க ஆரம்பித்தேன்," என் முதலாளி பத்து மில்லியன் கொடுத்து அமெரிக்க அல்லது ஐரோப்பா விலிருந்து பத்து சினை குதிரை வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம், இங்கு வந்த வுடன் அந்த பத்தில் ஒரு குதிரை abort ஆகி விடும், ஒன்பது குட்டிகள்தான் மிஞ்சும், மேலும் பாக்கி உள்ள ஒன்பது குதிரைகளும் எந்த பிரச்னையும் இல்லாமல் குட்டி போட்டாலும் பல்வேறு பிரச்னைகளால்(neo natal infection )அதில் ஒரு குட்டி இறந்து விடும் , மீதி எட்டு குட்டிகள்தான் மிஞ்சும், மிஞ்சிய எட்டு குட்டிகளில் விற்பனை வயதை அடைவதற்குள் paddock injuries அல்லது colic போன்ற காரணங்களால் ஒரு குட்டி மரணம் அடைந்து விடும், ஆக எஞ்சி இருப்பது ஏழு குட்டிகள்தான், இந்த ஏழில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் கால் கோணல் மாணலாக(conformational deformities )இருப்பதால் வாங்க ஆள் இருக்காது, எஞ்சி இருப்பது ஐந்து அல்லது ஆறு குட்டிகள் , இவற்றை விற்றுத்தான் என் முதலாளி போட்ட பத்து மில்லியன் -ஐ எடுக்க வேண்டும் இதில் இந்த குட்டிகள் மற்றும் அதன் அம்மாக்களுக்கு தீவனம், தொழிலாளர் மற்றும் மருத்துவ செலவுகள் , அவர் போட்ட பணத்திற்கான வட்டி , எல்லாம் கூடி ஒரு குட்டிக்கான சராசரி விலை இரண்டு மில்லியனை தொட்டு விடும், ஆகவே அவர் எதிர்பார்ப்பதில் என்ன தவறு" என்றேன். மேலும் அவரிடம் ,"இப்போது நீங்கள் buyer என்பதால் குறை கூறுகிறீர்கள் , எங்கள் முதலாளி குறைவான விலைக்கே விற்கிறார் என்று வைத்து கொள்வோம் , 10,000 ரியாலுக்கு குதிரையை நீங்கள் வாங்குகிறீர்கள் , அதை பயிற்சி அளித்து பந்தயத்தில் ஓட்டி, ஜெயிக்கவும் செய்து விட்டால், உங்களை விட பெரும் முதலாளிகள்(royals ) உடனே அந்த குதிரையை வாங்க உங்களிடம் பேரம் பேசினால், பத்தாயிரம் கொடுத்துதானே வாங்கினேன் எனக்கு மேலும் ஒரு பத்தாயிரம் போதும் என இருபதாயிரத்திர்கா விற்பீர்கள், ஒரு மில்லியன் வேண்டும் என கேட்க மாட்டீர்களா இப்போது நீங்கள் seller ஆகி விடுகிறீர்கள்....." என்றேன் . அந்த மனிதர் கோபம் தணிந்து " நீ சொல்வது சரிதான் என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.
கரையான்.