கல்லூரி நாட்களில் விளையாட்டு போட்டிகளில் கல்லூரி சிறகு பந்து அணிக்காக நைனிடால் சென்று வந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்... அனைத்திந்திய கால்நடை மருத்துவகல்லூரிகளுக்கு இடையேயான போட்டி ஜீ.பீ.பந்த் பல்கலைக்கழகம், பந்த் நகர், உத்தர பிரதேசம் -ல் நடந்தது. அதில் நம் கல்லூரி சார்பாக நம் சீனியர் பார்த்திபன், நான், நம் ஜூனியர் "தொப்பை"விஜயபாஸ்கர்(தொப்பை....மன்னிக்கணும் அப்படி சொன்னாதான் மக்களுக்கு தெரியும், ஸ்போர்ட்ஸ் ன்னாவே ஹாக்கி விஜயபாஸ்கர்தான் நினைவுக்கு வரும் அதனால் தொப்பை சேர்த்துள்ளேன்), நம் இரண்டு வருட ஜூனியர் கோபிநாத் மற்றும் அணி பயிற்சியாளர் நம் P.D என ஐந்து பேர் கொண்ட குழு பயணித்தோம்....டெல்லி சென்று அடைந்து பின்னர் அங்கிருந்து மீட்டர் கேஜ் ரயிலில் ஒருநாள் இரவு பயணம் செய்து விளையாட்டு நடைபெறும் இடத்தை அடைய வேண்டும், டெல்லி வரை முன்பதிவு இருந்ததால் பரவாயில்லை ஆனால் டெல்லியிலிருந்து பந்த் நகர் செல்வதற்கு முன்பதிவு இல்லாத சாதாரண கட்டை சீட்டில் அந்த கடும் குளிரில் உட்கார்ந்து போவது மிகவும் கஷ்டமாக இருந்தது.
நம் தமிழ் நாட்டு மார்கழி மாத குளிருக்கே நடுங்கும் நான் ஜன்னல் சரியாக மூட முடியாத ரயில் பெட்டியில் கம்பளி போன்ற குளிர்கால உடைகள் எந்த ஒன்றும் இல்லாமல் நடுங்கிக்கொண்டு பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். இரவு முழுதும் தூங்காமல் அடுத்த நாள் காலை சென்றடைந்தோம். குட்டி தூக்கம் போட்டு பின்னர் எழுந்து துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அடுத்த நாள் போட்டிகள் துவங்கியது நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி -க்கு எதிராக ஜெயித்தோம் அடுத்து ஜீ . பீ . பந்த் கல்லூரியிடம் போராடி தோற்றோம். பின்னர்தான் பெரிய கண்டம் பஞ்சாப் ்பாடியாலா கால்நடை மருத்துவக்கல்லூரி க்கு விளையாடும் வீரர் பஞ்சாப் மாநில அணிக்காக அகில இந்திய போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுபவர் என்பது தெரிந்ததும் நம் அணி வீரர்களுக்கு வயிறு கலங்க ஆரம்பித்து விட்டது, கொடுமை என்னவென்றால் அவனுக்கு எதிராக விளையாட வேண்டிய பலிகடா நான்தான், முதல் செட்டில் மிக போராடி 10-15 என்ற ஸ்கோரில் தோற்றேன் அடுத்த செட் 6-15 என்று கேவலமாக தோற்றேன், இருந்தாலும் ஒரு ஆறுதல் அவனுக்கு எதிராக அதிக பாயிண்ட் எடுத்த வீரர் நான்தான். எங்கள் சக வீரர் கோபிநாத் அதிக கோபம் கொள்வார், அவர் கோபம் எந்த அளவுக்கென்றால் பார்வையாளர்கள் அவருக்கு John Mc Enroe என்று பெயர் வைத்திருந்தனர், (அந்த நேரத்தில் John Mc Enroe அவரின் கோபத்திற்கு மிக பிரபலம்), umpire ஒரு முறை அவருக்கெதிராக தீர்ப்பு சொல்ல கையிலிருந்த பாட்மிண்டன் ராக்கெட்டை அவரை நோக்கி வீசி எறிந்தார், நான் அந்த நடுவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தது.
குளிர் வாட்டி எடுத்தாலும் அங்கு சென்று விளையாடியது ஒரு சிறந்த அனுபவம்.
இந்த போட்டிக்கு பின்னர் தொப்பை விஜயபாஸ்கர் "நைனிடால்" விஜயபாஸ்கர் என பெயர் மாற்றி வைத்துக்கொண்டான், மேலும் இத்தனை வருடங்கள் ஓடி விட்டாலும் மறக்காமல் நைனிடால் சென்று விளையாடிய சில strokes -இன்னும் ஆடி காட்டி கொண்டே இருக்கிறான், சென்ற வருடம் துபாய் சென்றிருந்தபோது கூட ஆடி காட்டினான்....
கரையான்.