செவ்வாய், செப்டம்பர் 27, 2011

மனதை உருக்கிய/உலுக்கிய படம்


போய் வா  மகனே....
வந்தால் மீண்டும்  புதைக்க..
நிலம் இவ்வுலகில் ஏராளம்...
நீயே உரமாகி....
வறட்சி போக்கிடுவாய்...
இந்நிலம் பூத்து குலுங்கும் நாள்....
தூரமில்லை....போய் வா மகனே...

கரையான். 

மனதை கவர்ந்த புகைப்படம்



கரையான்.

காதல் திருமணம்

         சமீபத்தில் தொலைகாட்சியில் காதல் திருமணம் செய்துகொண்டவருக்கும் அவரின் மாமனார் அல்லது பெண்ணை பெற்றவருக்குமான ஒரு உரையாடல் நிகழ்ச்சி பார்த்தேன்,  அதில் காதலில் எவ்வளவு கஷ்டங்கள் பட்டு காதலித்த பெண்ணை கைப்பிடித்தார்கள் என்று விவரித்தார்கள், தன் காதலித்து திருமணம் செய்துகொண்டதால் எவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டோம் என்பதை மாமனார்கள் விவரித்தார்கள். இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால், வெறியுடன் காதலித்து, காதலித்த பெண்ணை பல இன்னல்களுக்கு இடையில் கைபிடித்த இந்நாள் தந்தையர்கள் தங்கள் பெண் காதல் திருமணம் செய்வதை ஒப்புக்கொள்வதில்லை, ஒருவர் தன் மாமனார் பட்ட துன்பங்கள், அவமானங்களை பார்த்ததால் தான் பெண் குழந்தையே பெற்றுக்கொள்ள வில்லை என்றார், ஒரே மகன் மட்டும் போதும் என்று நிறுத்தி  கொண்டதாக கூறினார்.  தன் மகளும் காதல் திருமணம் செய்துகொண்டு எனக்கும் கஷ்டங்கள் கொடுத்து விடுவார் என்று எண்ணி பெண் குழந்தையே பெற்றுக்கொள்ள வில்லை என்று மேலும் கூறினார். இதை அனுபவம் சொல்லித்தந்த பாடம் என்பதா? இல்லை escapism என்பதா?    
     ஒரு நல்ல விஷயம் அனைவரும் தங்கள் மாமனார்களிடம் அவர்களால் ஏற்பட்ட  கஷ்டங்களுக்காக வருத்தம் தெரிவித்து கொண்டார்கள். காதல் மணம் புரிந்தோர், மணம் புரிந்து காதலிப்போர் இதைப்பற்றி எழுதலாம்.

கரையான்.

திங்கள், செப்டம்பர் 26, 2011

நண்பர் இளங்கோ



நம் நண்பர் இளங்கோ அவர்களின் புகைப்படம் இந்த வார பசுமை விகடனில் வந்திருந்தது.....என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்...

''பால் பண்ணை அமைக்கப் போகிறேன். கறந்த பால் எத்தனை மணி நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்?''
ஏ. சுப்பிரமணியன், கணக்கன்பட்டி.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின், பால் அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். இளங்கோ பதில் சொல்கிறார்.
''கறந்த பால் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரைதான் நன்றாக இருக்கும். அதற்கு மேல் அந்தப் பாலில் பாக்டீரியாக்கள் பெருகத் தொடங்கி விடும். இந்த பாக்டீரியாக்கள் பாலில் உள்ள லேக்டோஸ் என்ற பொருளை சாப்பிட்டுத்தான் பெருகுகின்றன. பாக்டீரியாக்கள் பெருகிய பிறகுதான் பால் கெட்டுப்போய் புளிப்புத் தன்மைக்கு மாறுகிறது. குளிர் சாதனப்பெட்டியில் வைக்கும்போது பாக்டீரியாக்களின் பெருக்கம் தடைபடும். குளிர் நிலையில் இருந்தாலும், 12 மணி நேரத்துக்குள் பயன்படுத்தி விடுவதுதான் நல்லது.
பால் கறக்கும் போதும் கவனமாக இருந்தால்தான், கெட்டுப் போகாமல் பாதுகாக்க முடியும். பால் கறப்பவர்கள் கைகளில் நகங்கள் இருக்கக் கூடாது. பால் கறப்பதற்கு முன்னர் சோப்புப் போட்டுக் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். பால் பாத்திரத்தை நல்ல தண்ணீரில் கழுவி, சூரிய ஒளியில் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். இதனால் பாத்திரங்களில் ஒட்டிக் கொண்டுள்ள பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த முடியும். பாலில் ஈ போன்ற பூச்சிகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
மறுசுழற்சி செய்யத்தக்க தரமான பாலிதீன் பைகளில் அடைத்துதான் விற்பனை செய்ய வேண்டும். பண்ணைகளில் வேலை செய்பவர்கள் கையுறை அணிய வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகக் கடைபிடித்தால், கறந்து 8 மணி நேரம் வரை பாலைக் கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடியும்.''

கரையான்.

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

முகவரி இழந்தோர்

அரபு நாடுகளில் பணி புரிவோரில் பெரும்பாலோர் முகவரி இழந்தோர்தான். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பணி புரிவோர் குறிப்பிட்ட காலம் அந்த நாட்டிலேயே வாழ்ந்தால் அங்கு குடியுரிமை பெரும் வாய்ப்பை பெறுகிறார்கள், ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்போருக்கு எத்தனை ஆண்டுகள் அங்கு வசித்தாலும் குடியுரிமை கிடைக்காது. 
சொந்த மண்ணுக்கு ஆண்டுக்கு ஒருமுறையோ / பல்லாண்டுகளில் ஒரு முறையோதான் 
விஜயம் செய்ய வாய்ப்பிருப்பதால், பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊருக்கு விருந்தாளிபோல்தான் சென்று வர வேண்டிய கட்டாயம், காலம் உருண்டோடி விளையும் மாற்றத்தால் ஊரில் வசிக்கும் மற்றோரால் மறக்கப்படுகிறோம், பால்ய நண்பர்கள், அண்டை அயலார் என பலரும் உரு மாறி விடுவதாலோ, இடம் மாறி விடுவதாலோ சொந்த மண்ணில் அன்னியப்பட்டு போகிறோம்.  சென்ற தாயக விஜயத்தின் போது மனைவியுடன் கடைக்கு சென்றேன், கடைக்காரர் என் மனைவியை மிக பணிவோடு வரவேற்றார்,"வாங்கம்மா, சௌக்கியமா இருக்கீங்களா" என்றெல்லாம் விசாரிப்பு வேறு, பக்கத்தில் நின்ற என்னை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை, நம்ம ஊருல நம்மள தெரியல என் மனைவிய தெரியுதே என்று ஆச்சரியப்பட்டு போனேன்.(நம்ம விட மனைவி பேமசா இருக்காங்களேன்னு  ஒரு சின்ன பெருமைதான்....), அவர் என் சகோதரனின் client அவர் வழக்கு சம்பந்தமாக எங்கள்  வீட்டுக்கு வரும்போது என் மனைவி அறிமுகமாகி இருக்கிறார், இதன் காரணமாக உள்ளூரில் கடைக்கோ,வங்கி, கோவில் எங்கு சென்றாலும்  "நான் இன்னாரோட அண்ணி" என்று அறிமுகப்படுத்தி கொள்கிறாள். "உங்க பேர சொன்னா யாருக்கு தெரியுது" என்று நக்கல்/குத்தல்  வேறு.
"சொந்த மண்ணில் முகவரி இழந்த" கரையான்.

சனி, செப்டம்பர் 24, 2011

காசு மேல காசு .........

மதிய கிழக்கு நாடுகளில் வாழும் கீழ் நிலை தொழிலாளர்களின் நிலை மிக கொடுமை... இங்கு வருவதற்கு சராசரியாக  தொழிலாளி ஒருவருக்கு ஒரு லட்சமாவது செலவாகி விடும், இந்த பணத்தை யாரும் கையில் வைதிருந்தோ, சேமிப்பில் இருந்தோ தருவதில்லை, ரெண்டு வட்டி மூன்று வட்டி கடனுக்கு வாங்கி தான் ஏஜென்ட்-க்கு கொடுத்து விட்டு வருகிறார்கள். அவர்கள் வருவதோ எண்ணூறு முதல் ஆயிரம் ரியால் வரைக்கான சம்பளம்தான். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு பத்தாயிரதிலிருந்து பன்னிரெண்டாயிரம் ரூபாய் மட்டுமே. இதில் அவரின் உணவுக்காக குறைந்தது முன்னூறு ரியால், தொலைபேசியில் பேச நூறு ரியால் என கழிந்து விட்டால் மிச்சம் இருப்பது ஐயாயிரம் ரூபாய் அளவுதான் இருக்கும். அவர் வாங்கிய கடனுக்கு மாத வட்டி வேறு தனி. எங்கள் பண்ணையில் பணி புரியும் வங்க  தேசத்தவர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் விடுமுறையில் செல்வர், அவர்கள் அதற்கு சொல்லும் காரணம், "இரண்டு ஆண்டுக்கு  ஒரு முறை சென்று எங்கள் மனைவி குழந்தைகளை பார்க்க எங்களுக்கும் ஆசைதான், ஆனால் எங்களின் கடன் எப்போது அடைப்பது, இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் விமான டிக்கெட்டுக்கான பணம் பயணம் செய்யாமலே நாங்கள் பெறுவதால் அது மிச்சமாகிறது மேலும் விடுமுறையில் செல்லும்போது உற்றார் உறவினருக்கு பரிசுப்பொருள்கள் கண்டிப்பாக வாங்கி செல்ல வேண்டும், அந்த காசும் மிச்சமாகிறது இப்படி எல்லாம் மிச்சம்  பிடித்தால்தான் கடனை அடைக்க முடியும்"என்பார்கள். 
இங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் உணவு கோழிக்கறி + ரொட்டி அல்லது சோறு, காய்கறிகள் பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள், கோழி ஒரு கிலோ பத்து ரியால், இரண்டு நாட்களுக்கு(சமயத்தில் மூன்று நாட்கள் கூட) சாப்பிடலாம், சில நேரங்களில் எங்கள் பண்ணையின் பக்கத்தில் இருக்கும் layer farm- இல் cull செய்யப்படும்  கோழிகள் ஒன்று ஒரு ரியால் விலையில் கிடைக்கும், மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு தினமும் 
ஒன்றுஎன அடித்து சாப்பிடுவதும் உண்டு. காய்கரிகள சாப்பிட  வேண்டுமென்றால்
விலை கட்டுப்படி ஆகாது. இப்படியெல்லாம் மிச்சம் பிடித்து கடைசியில் இவர்கள் சம்பாதிப்பது உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீரக கல் ஆகிய வியாதிகளைத்தான். 


மேலும் எழுதுவேன்...

கரையான்.

மலரும் நினைவுகள்



கரையான்.