சனி, நவம்பர் 23, 2013

ரத்த தானம்

 என்னுடன் பணி  புரியும் ஒரு தொழிலாளிக்கு குதிரை அடித்ததால் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறிவிட்டார்கள், அதற்கு அவருக்கு நான்கு யூனிட் ரத்தம் O +ve  ரத்தம் தேவை, தயார் ஆனவுடன் அறுவை சிகிச்சை செய்வதாக கூறினார்கள், எங்கள் பண்ணையில் பணி புரியும் மற்ற வேலை ஆட்கள் மற்றும் நான் என எட்டு பேர் சென்றோம், ஆனால் அதில் மூன்று பேரிடம் மட்டுமே ரத்தம் எடுக்க முடியும் என கூறி விட்டார்கள், வேறு குரூப், மற்றும் haemoglobin அளவு குறைவாக இருந்தது என கூறி நிராகரித்து விட்டார்கள், குறைந்தது 13.0mg இருக்க வேண்டும் எனக்கு 12.9 mg என்பதால் என்னிடமும் ரத்தம் எடுக்க முடியாது என்று கூறி விட்டார்கள், பின்னர் நண்பர்களுக்கு தகவல் கூறி இரண்டு பேர் வந்து ரத்தம் கொடுத்தார்கள்,  ரத்த வங்கியில் காத்திருக்கும் நேரத்தில் அங்கு பணியிலிருந்த பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்த nurse -ஐ பார்த்து மிக பரிதாபமாக இருந்தது. பல நாட்டவர்கள் பல மொழி பேசுபவர்கள் என அவர்களை சமாளித்ததை பார்த்த போது வியப்பாக இருந்தது. சிரியா நாட்டவர் இருவர் வந்திருந்தனர், அவர்களை ஒருவரின் ரத்தம் நார்மல் இல்லை என மற்றொருவருக்கு மட்டுமே எடுக்க முடியும் என கூறினார் அந்த nurse , நிராகரிக்கப்பட்டவர் பரவாயில்லை இன்னொரு unit ஐயும் அவருடன் வந்த மற்ற நபரிடம் சேர்த்து  எடுக்க கூறினார், ஆனால் அந்த nurse ஒருவருடமிருந்து ஒரு unit மட்டுமே எடுக்க முடியும் என விவரிக்க பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. அடுத்து ஐந்து சவுதி நாட்டவர்கள்  அவர்களின் உறவினருக்கு ரத்தம் கொடுக்க வந்தார்கள், இரண்டு பேர் உடல் எடை குறைவாக இருந்ததால் நிராகரிக்கபட்டார்கள் , மீதி மூன்று பேரிடம் ரத்தம் எடுக்க அந்த nurse தயாரானார், அதில் ஒருவர் எவ்வளவு ரத்தம் எடுப்பீர்கள் என்று கேட்டார், 450 மில்லி என கூறி அந்த ரத்த பையையும் காட்டினார், அதை கேட்ட சவுதி டென்ஷன் ஆகி, என்னுடைய உடம்பிலிருந்து அவ்வளவு ரத்தம் எடுத்தால் நான் செத்து விடுவேன், ஒரு 100 மில்லி வேண்டுமானால் எடுத்து கொள் என கூறினார், அந்த பெண் இல்லை சார் ஒரு பையின் அளவு 450 மில்லி, உலகம் பூராவும் இப்படிதான் எடுக்கப்படுகிறது, குறைவாக எடுத்தால் உபயோகம் அற்று போய்  விடும் என கூறினார், ஆனால் அந்த சவுதி விடுவதாக இல்லை, எங்கள் நான்கு பேரிடமிருந்தும் நூறு நூறு மில்லி ஒரே பையில் பிடித்துகொள் என ஏதோ குழாயில் தண்ணி பிடிப்பது போல் விவாதம் செய்தார், அந்த பெண் அப்படியெல்லாம் செய்ய முடியாது சார், உங்களால் கொடுக்க முடியாதென்றால் நீங்கள் சென்று வேறு ஒருவரை அழைத்து வாருங்கள், என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டார். இவர்கள் படுத்தியது போதாதென்று, ரத்தம் கொடுக்க வந்த என் நண்பர், ரத்தம் கொடுத்து முடித்த வுடன் லேசாக மயக்கமாகி என்னை டென்ஷன் ஆக்கினார்.

கரையான். 

செவ்வாய், நவம்பர் 19, 2013

முதலாளியின் நஷ்டம் என்னுடைய நஷ்டம்.....

என் முதலாளி குதிரை விற்காததால் அவருக்கு நஷ்டமோ இல்லையோ எனக்கு நஷ்டம்,  முதலாளிக்கு ஆதரவாக  பேசினாலும் மனது பூராவும் கோபமும் இயலாமை உணர்வும் இருப்பதை மறுக்க முடியாது. குதிரை விற்பனைக்கு ஏற்றவாறு எனக்கு ஊக்க தொகை(incentive ) வழங்கப்பட வேண்டும், சரியாக விற்பனை ஆகாததால் எனக்கும் நஷ்டம்தான். உற்பத்தியை பெருக்கி விற்பனை செய்யக்கூடிய அளவில் தயார் செய்வதற்காக வழங்கப்படும் தொகை இது, விற்பனை ஆகாதது என் தவறில்லை என்றாலும் எனக்கான ஊக்க தொகை கிடைக்காமல் போகும் . இது மட்டுமலாமல் இந்த குதிரைக்குட்டிகள் அடுத்த நிலையான பந்தய குதிரைகளாக ஆக்குவதற்கான பயிற்சிகளை செய்வது என் தலையில் திணிக்கப்படும்.  குட்டியாக இருந்து பந்தய குதிரை என்ற அடுத்த நிலைக்கு பயிற்சி அளிப்பது  பொறுமையை சோதிப்பதாகவும், நம்முடைய பணி நேரத்தை அதிகம் எடுத்து கொள்ளவும் செய்யும். இந்த குட்டிகள் நன்றாக பின்னாளில் பந்தயத்தில் ஓடும்போது அதில் வரும் லாபம் (10% commission from stakes money) பயிற்சியாளருக்கு(trainer) சேரும், ஆக பயிற்சியாளருக்கு இரட்டை லாபம் எனக்கு இரட்டை நஷ்டம்.
ஒரு நல்ல trainer என்றால் அவரிடம் பயிற்சிக்கு செல்லும் 10 குதிரைகளில் 3 குதிரைகள் ஜெயிக்க வேண்டும், 10-ல் 8 குதிரைகளாவது பந்தயத்தில் கலந்து கொள்ளவேண்டும். இரண்டு குதிரைகள் பல்வேறு காயங்கள் (tendinitis, fractures ,etc )காரணமாக  கதை முடிந்து போகும். ஆனால் எங்கள் பயிற்சியாளர் தலை கீழ் 10 இல் 3 பந்தயத்தில் கலந்து கொண்டால் பெரிய விஷயம் அதில் ஒன்று ஜெயித்தால் அது பெரும் அதிசயம். மற்ற 7 குதிரைகளும் குப்பைக்குத்தான் போகும். இந்த நிலையை மாற்ற இரண்டு ஆண்டுகள் முன்னர் எங்கள் முதலாளி என்னிடம் ஆலோசனை கேட்டார், நான் அவரிடம் systematic training programme ஐ விளக்கினேன், அவர் உடனே குட்டிகளை முதல் மூன்று மாதங்கள் பயிற்சி   செய்யும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்,  சென்ற ஆண்டு முதல் எங்கள் குட்டிகள் ஜெயிக்க ஆரம்பித்து விட்டன, இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் எங்கள் பண்ணை 2 year old குட்டி மிக சிறப்பாக ஜெயித்தது, உடனே இந்நாட்டு மன்னர் விலைக்கு வாங்கி விட்டார். இப்போது பயிற்சியாளருக்கு இரட்டை லாபம் அந்த குட்டி விற்ற விலையில்(  3 மில்லியன் சவுதி ரியால்) 5 சதவீதம் அவருக்கு முதலாளி கொடுப்பார்.  இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இவை ஜெயிக்காமல் போயிருந்தால் பயிற்சியாளர் என் மேல் பழியை போட்டு  தப்பி இருப்பார்.
"எனக்கும் கோவேறு கழுதைக்கும் பெரும் வித்தியாசம் இல்லை என்ற எண்ணம் அவ்வப்போது உதிப்பதையும் மறுக்க முடியாது........"

கரையான்.

திங்கள், நவம்பர் 11, 2013

லாபமில்லை....

இலாபமில்லை என்ற சொல் பல இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது, அதுவும் விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த தொழில் செய்பவர்களில் பலர் உற்பத்தி செய்பவன் இழப்பையே சந்திக்க வேண்டியுள்ளது என்று புலம்புவது இப்போது வாடிக்கை ஆகி விட்டது. (நம்முடைய முக நூல் (face book ) பதிவில் கூட சொக்கன் கருப்பட்டி உற்பத்தியாளர்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தான்).
சென்றமாத இறுதி மற்றும் இந்த மாத தொடக்கத்தில் எங்கள் பண்ணையின் ஒரு வயது குதிரைகள் விற்பனை நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சவுதியில் உள்ள அனைத்து பண்ணையாளர்களின் ஒரு வயது குட்டிகளுக்கான விற்பனை நடக்கும், எங்கள் பண்ணையின் உற்பத்தியான 35 குட்டிகளும் கலந்து கொண்டன...விற்பனை மிக மோசமாக இருந்தது, உற்பத்தி விலையில் பாதி கூட கேட்கப்பட வில்லை(உலகளாவிய பொருளாதார மந்த நிலை?), நான் விற்பனை அரங்கில் உட்கார்ந்து கொண்டிருந்தேன், அப்போது ஏற்கனவே எனக்கு பழக்கமான ஒரு சவூதி காரர் என்னருகில் உட்கார்ந்தார், பெரிய பணக்காரர் ஒரு மில்லியன் டாலர் கொடுத்து கூட குதிரை வாங்குவார்(ஆனால் அதை மருத்துவம் செய்யும் மருத்துவருக்கு நூறு டாலர் கொடுக்க பத்து முறை பேரம் பேசுவார்) என்னிடம் மிக கோபமாக "உங்க முதலாளி என்ன எல்லா குதிரைக்கும் மில்லியன் எதிர்பார்க்கிறார், கொஞ்சம் குறைத்து விற்றால் என்ன அவரிடம் பணமா இல்லை " என்றார். நான் அவரிடம் "என் முதலாளி பணம் போடுகிறார் மிக விலை உயர்ந்த குதிரைகளை வெளி நாடுகளில் இருந்து வாங்கி வருகிறார் அவர் எதிர் பார்ப்பதில் என்ன தவறு " என்றேன். உடனே அவர் "பத்து மில்லியன் செலவு செய்து விட்டு இருபது மில்லியன் எதிர் பார்க்கிறார், அவர் எவ்வளவு விலைக்கு  வாங்கினார் என்பது இணையதளத்தில் உள்ளதே" என்றார்.
நான் அவருக்கு விளக்க ஆரம்பித்தேன்," என் முதலாளி பத்து மில்லியன் கொடுத்து அமெரிக்க அல்லது ஐரோப்பா விலிருந்து பத்து சினை குதிரை வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம், இங்கு வந்த வுடன் அந்த பத்தில் ஒரு குதிரை abort ஆகி விடும், ஒன்பது குட்டிகள்தான் மிஞ்சும், மேலும் பாக்கி உள்ள ஒன்பது குதிரைகளும் எந்த பிரச்னையும் இல்லாமல் குட்டி போட்டாலும் பல்வேறு பிரச்னைகளால்(neo natal infection )அதில் ஒரு குட்டி இறந்து விடும் , மீதி எட்டு குட்டிகள்தான் மிஞ்சும், மிஞ்சிய எட்டு குட்டிகளில் விற்பனை வயதை அடைவதற்குள் paddock injuries அல்லது colic போன்ற காரணங்களால் ஒரு குட்டி மரணம் அடைந்து விடும், ஆக எஞ்சி இருப்பது ஏழு குட்டிகள்தான், இந்த ஏழில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் கால் கோணல் மாணலாக(conformational deformities )இருப்பதால் வாங்க ஆள் இருக்காது, எஞ்சி இருப்பது ஐந்து அல்லது ஆறு குட்டிகள் , இவற்றை விற்றுத்தான் என் முதலாளி போட்ட பத்து மில்லியன் -ஐ  எடுக்க வேண்டும் இதில் இந்த குட்டிகள் மற்றும் அதன் அம்மாக்களுக்கு தீவனம், தொழிலாளர் மற்றும் மருத்துவ செலவுகள் , அவர் போட்ட பணத்திற்கான வட்டி , எல்லாம் கூடி ஒரு குட்டிக்கான  சராசரி விலை இரண்டு மில்லியனை தொட்டு விடும், ஆகவே அவர் எதிர்பார்ப்பதில் என்ன தவறு" என்றேன். மேலும் அவரிடம் ,"இப்போது நீங்கள் buyer என்பதால் குறை கூறுகிறீர்கள் , எங்கள் முதலாளி குறைவான விலைக்கே விற்கிறார் என்று வைத்து கொள்வோம் , 10,000 ரியாலுக்கு குதிரையை நீங்கள் வாங்குகிறீர்கள் , அதை பயிற்சி அளித்து பந்தயத்தில் ஓட்டி, ஜெயிக்கவும் செய்து விட்டால், உங்களை விட பெரும் முதலாளிகள்(royals ) உடனே அந்த குதிரையை வாங்க உங்களிடம் பேரம் பேசினால், பத்தாயிரம் கொடுத்துதானே வாங்கினேன் எனக்கு மேலும் ஒரு பத்தாயிரம் போதும் என இருபதாயிரத்திர்கா விற்பீர்கள், ஒரு மில்லியன் வேண்டும் என கேட்க மாட்டீர்களா இப்போது நீங்கள் seller ஆகி விடுகிறீர்கள்....." என்றேன் . அந்த மனிதர் கோபம் தணிந்து " நீ சொல்வது சரிதான் என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.

கரையான்.

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

"EXECUTIVE MASTER HEALTH CHECK-UP"

மருத்துவ துறை அலட்சியத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி (பல ஆண்டு பெரும் இழுதடிப்பிக்கு பின் ) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வரவேற்கத்தக்க ஒன்றுதான் என்றாலும் மிக நீண்ட இழுபறிக்கு பின்னர் (1998 -ல் நடந்த சம்பவம்) வழங்கப்பட்டுள்ளது சாதாரண மக்கள் நீதி மன்றத்தை அணுக ஊக்கப்படுத்துவதாக இல்லை.
நான் சவுதியில் அனுபவித்ததை ஏற்கனவே சொல்லி /எழுதி இருக்கிறேன், சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட அனுபவத்தையும் எழுதுகிறேன்.
சவுதி திரும்பும் முன்னராக ஒரு complete health check-up செய்து கொள்ளலாம் என்று ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றேன்.  மொத்தமாக நான்காயிரத்து ஐந்த்நூறு கட்டினால் எல்லா பரிசோதனைகளும்(பிரேத பரிசோதனை தவிர) செய்து பிரச்னைகள் இருந்தால் அந்த துறை நிபுணர்களின் அறிவுரையும் வழங்கப்படும் என்று கூறினார்கள் அதற்கு "EXECUTIVE MASTER HEALTH CHECK-UP" என்று அழகாக  பெயரும் வைத்துள்ளார்கள்.  ரொக்கமாக இல்லாமல் டெபிட் கார்டு உபயோகித்தால் ஒன்னரை சதவீதம் சர்வீஸ் டாக்ஸ் என்றார்கள், அங்கே இருந்த இரண்டு ATM கருவிகளும் வேலை செய்ய வில்லை, ஆகவே வேறு வழியில்லை கார்ட் உபயோகித்துதான் ஆக வேண்டும். பணம் கட்டிய பின்னர் ஒவ்வொரு டெஸ்ட் ஆக  செய்தார்கள், ECG நார்மலாக இல்லை, எனவே tread mill அல்லது Echo Cardiograph செய்ய வேண்டும் என்றார்கள், tread mill ecg நான் பணம் கட்டிய திட்டத்திலேயே அடக்கம் என்பதால் புதிதாக பணம் கட்ட வேண்டியதில்லை என்று நினைத்தேன், ஆனால் என்னை பரிசோதித்த மருத்துவர், tread mill க்கு பதிலாக  echo செய்து கொண்டால் நல்லது மிக நுணுக்கமாக தெரிந்து விடும் என்றார், echo வுக்கு மேலும் 1700 ரூபாய் கட்ட வேண்டும் என்றார்கள், அதை கட்டி echo எடுத்ததில் normal  என்று கூறி விட்டார்கள், இருந்தாலும் specialist இடம் ஒரு ஒபினியன் வாங்கி  விடுங்கள் என்றார்கள், அதற்கு தனியாக 300 ரூபாய் கட்டி அவரை போய் பார்க்க சொன்னார்கள்,அவர் என்னுடைய ecg யையும் echo இரண்டையும் பார்த்து விட்டு, கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது எதற்கும் ஒரு treadmill ecg செய்து விடுங்களேன் என்றார், நொந்து விட்டேன்...திரும்பவும் treadmill செய்ய 1500 கொடுத்து treadmill ecg செய்து முடித்தபோது அந்த துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் பணி நேரம் முடித்து சென்று விட்டார்கள். அங்கிருந்த மாணவி ஒருவர் எல்லாம் நன்றாகவே இருக்கிறது ஒன்றும் பிரச்னை இல்லை என்றார், எதற்கும் சந்தேகத்திற்கு கொஞ்சம் அனுபவசாலியாக தெரிந்த ஒரு ஆபீஸ் அசிஸ்டன்ட் போல இருந்தவரிடமும் என்னுடைய report ஐ காட்டினார்(வெள்ளை சட்டை வெள்ளை பான்ட் அணிந்து பெரிதாக குங்கும போட்டு வைத்திருந்தார்...கண்டிப்பாக டாக்டர் கிடையாது, அனுபவ வைத்தியர் போல தெரிந்தார்.) அவரும் ஒன்னும் பிரச்னை இல்லை என்று கூறி என்னை அனுப்பினார்(எல்லோரும் பணி முடிந்து வீடு செல்லும் அவசரத்தில் இருந்தனர்)...இப்படித்தான் பெரும்பாலான diagnosis செய்யப்படுகிறதோ என்று நினைத்து கொண்டேன் .....

கரையான்.

வெள்ளி, அக்டோபர் 25, 2013

நண்பர் குமரவேல் .....PASUMAI VIKATAN.



எந்த விளைபொருளாக இருந்தாலும், அதை அப்படியே சந்தைப்படுத்தாமல் மதிப்புக் கூட்டி விற்றால்தான் அதிக லாபம் பார்க்க முடியும்' என்கிற விழிப்பு உணர்வு, விவசாயிகள் மத்தியில் பெருகி வரும் காலமிது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களிலும் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகளும், அதற்கான கருவிகள் பற்றிய விவரங்களையும் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள். 'பசுமை விகடன்’ கருவிகள் சிறப்பிதழுக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலைய மனையியல் துறை உதவிப் பேராசிரியை டாக்டர். விமலாராணியிடம் மதிப்புக்கூட்டும் கருவிகள் பற்றி கேட்டோம். அவர் தந்த தகவல்கள் இங்கே...
பனீர் அழுத்தும் கருவி
பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சைச் சாறு கலந்து விட்டால், பால் திரியும். அதை, காடா துணியில் வடிகட்டி, அத்துணியுடனே இக்கருவியில் சதுர வடிவில் இருக்கும் ஃபிரேமில் வைத்துத் திருகினால், தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு கெட்டியான பனீர் கிடைக்கும். இதைத் தண்ணீரில் கழுவி 'பேக்' செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். வட்ட வடிவ பனீர் தயாரிக்கும் கருவியும் இருக்கிறது. ஆனால், சதுர வடிவத்துக்குத்தான் வணிகரீதியாக விற்பனை வாய்ப்புகள் உள்ளன. இக்கருவியில் அதிகபட்சமாக 5 லிட்டர் பாலைப் பிழிய முடியும். 1 லிட்டர் பாலிலிருந்து 200 கிராம் வரை பனீர் கிடைக்கும். இக்கருவி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், துரு பிடிக்காது. இதன் விலை 2 ஆயிரத்து 500 ரூபாய்.
சேமியா பிழியும் கருவி
சேமியா தயாரிப்பதற்கான பொருட்களைக் கலந்து பிசைந்து, இக்கருவியில் வைத்து சுற்றினால், சேமியா வெளிவரும். இதை உலர்த்தி பேக் செய்யலாம். இக்கருவியில் சேமியாவின் தடிமனை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. தவிர, நீளமாகப் பிழியும் வசதியும் உள்ளது. இதன் விலை 2 ஆயிரத்து 500 ரூபாய்.
பிஸ்கெட் தயாரிக்கும் அடுமனை இயந்திரம் (பேக்கரி)
தேவையான மூலப்பொருட்களைக் கலந்து பிசைந்து, தேவைப்படும் வடிவ அச்சில் நிரப்பி... மின்சாரத்தில் இயங்கும் இக்கருவியில் உள்ள 'ட்ரே’யில் வைத்து இயக்கினால், அரை மணிநேரத்தில் பிஸ்கெட் தயார். உள்ளே சூடேறிக் கொண்டிருக்கும் பொருளின் நிறம் மாறுவதைப்  பார்க்கும் வகையில் கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் கேக்குகளையும் தயாரிக்க முடியும். இது 1,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில், பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது.  
மூடி போடும் இயந்திரம்
ரோஸ் மில்க், பாதாம் பால், குளிர்பானங்கள்... போன்ற திரவ வடிவப் பொருட்களை பாட்டில்களில் அடைத்து, அவற்றுக்கு தகர மூடி போட இக்கருவி பயன்படுகிறது. நாம் வைக்கும் பாட்டிலின் அளவுக்கு ஏற்ப மூடியின் அளவை மாற்றியமைக்கும் வசதியும் உண்டு. இதன் விலை 2 ஆயிரத்து 200 ரூபாய். ஊறுகாய் பாட்டில்களைக் காற்றுப் புகாதபடி அடைத்து மூடி போடுவதற்கான பிரத்யேகக் கருவியும் உள்ளது. இதன் விலை 2 ஆயிரத்து 600 ரூபாய்.
பேக்கிங் கருவி (Sealing Machine)
மஞ்சள், மிளகாய், தனியா, மிளகு, சீரகம் போன்ற பொருட்களை அரைத்து கிடைக்கும் பொடியை பேக் செய்யும் கருவி இது. இதன் மூலம் மிக எளிதாக பேக் செய்ய முடியும். இது 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில், பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது.
வெற்றிட பேக்கிங் போடும் கருவி (Vacuum Packing Machine)
காற்றுடன் சேர்த்தோ அல்லது காற்றை நீக்கியோ பேக் செய்ய, இக்கருவி பயன்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் இக்கருவியில் அதிகபட்சம் 5 கிலோ வரை அளவுள்ள பொருட்களை பேக் செய்ய முடியும். இதன் விலை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல்.
தேங்காய் துருவும் கருவி    தேங்காய் துருவல் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பர்பி உள்ளிட்ட பொருட்களுக்காக தேங்காயை துருவுவதற்கு, இக்கருவி பயன்படுகிறது. இதை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, தேங்காய் மூடியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, மறு கையில் கைப்பிடியை வேகமாக சுழற்றினால், துருவல்கள் கீழே கொட்டும். இதன் விலை 300 ரூபாய்.
மொத்தக் கருவிகள் மற்றும் அதற்கான விளக்கங்களை விமலாராணி சொல்லி முடிக்க...
''தொழில்முனைவோராக விரும்புபவர்கள், இதுபோன்ற மதிப்புக் கூட்டி விற்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு தொழி லில் இறங்கலாம். மகளிர் சுயஉதவிக் குழுவில் இருக்கும் பெண்களும் இதில் ஈடுபடலாம். இதற்கான பயிற்சிகளை எங்கள் மையத்தில் இலவசமாகவே தந்து வருகிறோம். அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அழைப்பு வைத்தார்... வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் குமரவேலு!
தொடர்புக்கு, 
வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.,
தொலைபேசி: 044-27452371,
செல்போன்: 99942-83960.
நண்பர் குமாரவேல் அவர்களை பாராட்டி சென்னை நட்சத்திரங்கள் அனைவரும் அவருடைய செல் பேசிக்கு ஓயாது missed call கொடுக்கவும்....

கரையான்.

Dr.Ganesh


நம்ம கணேஷ் விகடன் புத்தகத்தில்.....

கரையான்.