திங்கள், டிசம்பர் 12, 2011

வயதாகிறது....

சில தருணங்களில் ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்னு இருக்கும் அந்த மாதிரி தருணங்களில் ஒன்று ஒட்டகத்தில் ஏதாவது சிகிச்சை செய்ய வேண்டிய தருணம்.  குதிரைல எல்லாமே குதிரையின் விலையை பொறுத்து என்பதால்  எந்த குதிரையில் கை வைத்தாலும் ஒரு டென்சன் இருப்பது பழகிய ஒன்றுதான்.  குதிரை நம்முடைய சிகிச்சைக்குப்பின்னும் மண்டையைப்போட்டால் முதலாளியோ சக ஊழியர்களோ ரொம்ப காஸ்ட்லி குதிரை என்பார்கள்(அது கழுதையாக இருந்தாலும்).  ஒரு முறை நண்பர் ஒருவர் castration செய்தார் அந்த குதிரைக்கு கிட்டதட்ட ஐந்து மணி நேரமாக ரத்தம் நிற்கவே இல்லை, என்னிடம் புலம்பி தள்ளி விட்டார், "இந்த வேலைக்கு வந்ததற்கு பேசாம ஒரு அக்கவுண்டன்ட் மாதிரி வேலைக்கு சென்றிருந்தால் இந்த மாதிரி டென்ஷன் இல்லாமல் இருந்திருக்கலாம், என்ன பிழைப்பு இது என்று தொடர்ச்சியாக புலம்பி கொண்டிருந்தார், நானும் அவரிடம் எனக்கு கூட இப்படிதான் பல முறை தோன்றி உள்ளது கவலைப்படாதே சரியாகி விடும்" என்றேன். முந்தாநேற்று இரவு ஒரு குதிரைக்கு பிரச்சினை, இரவு இரண்டு மணி வரை வைத்தியம் பார்த்து சரியாக்கிய பின் சிறிது நேர தூக்கம், காலை ஆறு மணிக்கு ஒரு ஒட்டகம் அடி பட்டு விட்டது என அழைப்பு, ஒட்டக பராமரிப்பாளர் " டாக்டர் சாப் இந்த ஒட்டகத்தின் விலை ஐந்து மில்லியன் ரியால் அதனால் உடனே வந்து சிகிச்சை செய்யவும்" என்று மிரட்டல் கலந்த வேண்டுகோள் வைத்தார். நானும் எல்லா உபகரணங்களுடன் சென்றேன், அவர் வேறு மிக காஸ்ட்லி என்று கூறி விட்டாரே, மயக்க மருந்து கொடுப்பதற்கு   கொஞ்சம் தயக்கத்துடன் தான் கொடுத்தேன். கிட்ட தட்ட ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தையல் போட்டு முடித்தேன், ஒட்டக தோல் கிட்டத்தட்ட எருமை தோலை விட கொஞ்சம் வலிமையானது என்றுதான் கூற வேண்டும், கை முதுகு  சரியான வலி, திரும்ப பகல் பன்னிரண்டு மணிக்கு அழைப்பு, போட்ட தையல் எல்லாம் பிய்ந்து விட்டது, திரும்ப வந்து தையல் போட வேண்டுமென்று. திரும்ப மூன்று மணிக்கு எல்லா உபகரணங்களோடு சென்று, இந்த முறை மயக்கம் கொடுப்பதா கொடுக்காமல் செய்வதா என்ற குழப்பம்(ஏனென்றால் காலையில் கொடுத்த மயக்கமே மதியம் ரெண்டு மணிக்குதான் தெளிந்ததாக பணியாளர் கூறினார்), திரும்ப ஒன்றரை மணி நேரம் போராடி தையல் போட்டு முடித்தேன், முதுகு கிட்டத்தட்ட கூன் விழுந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும், சரியான முதுகு, இடுப்பு வலி. இதில்  குளிர் காற்று வேறு, காலையில் ஏழு டிகிரி சி மாலையில் கொஞ்சம் பரவாயில்லை பதினெட்டு டிகிரி. ஆனால் அந்த குளிரிலும் வேர்த்து விட்டது. எல்லாம் முடிந்து குதிரைகளுக்கான சிகிச்சை எல்லாம் முடித்து வீடு சென்று குளித்து உண்டு ஒன்பது மணிக்கே படுத்தேன், ஒன்பது பத்துக்கு தொலைபேசி அழைப்பு குதிரை ஒன்று உடல்நிலை சரி இல்லை என்று. இந்த நேரத்தில் என் மன நிலை அந்த நண்பரின் நிலைதான்.....


Age is catching up.....இப்படியே வேலை செய்வது கொஞ்சம் கடினம் , சொக்கன் பாபு மாதிரி மத்தவங்கள வேலை வாங்குற அதிர்ஷ்டம் எல்லாருக்கும் கிடைப்பது  அரிதுதான்.

கரையான்.

சனி, டிசம்பர் 10, 2011

பயண அனுபவம்

அஜால் குஜால் என்றவுடன் பயணத்திற்கு முன் சில நண்பர்களிடம் அறிவுரைகள் வேண்டி பேசியவைதான் நினைவுக்கு வருகிறது.  முன்னரே இங்கிலாந்து சென்று வந்திருந்த நண்பர்கள் சிலரிடம் என்னுடைய விஜயம் பற்றி கூறி எங்கெங்கு போகலாம், எவைஎவை பார்க்க வேண்டும் என்று விசாரித்தேன், அவர்கள் கூறியவற்றில் பெரும்பாலான விஷயங்கள் எழுத முடியாதது. பயணத்திற்கு முன் விசா விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பித்தபின் காத்திருந்த பொது என பல கட்டங்களில் என் மனைவி தீவிர பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டிருந்தார், விசா வெல்லாம் கிடைத்து நான் இங்கிலாந்து சென்ற பின்னர் அங்கிருந்து தொலைபேசியில் அழைத்தபோது பூஜை செய்துகொண்டிருந்தார், அதுதான் இங்கிலாந்து விஜயம் செய்து விட்டேனே பின்னரும் என்ன விசேஷ பூஜை என்று கேட்டேன், "நீங்க பத்திரமா வரணும்மில்ல" என்றாள், இந்த பத்திரத்தில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளதாக எனக்கு பட்டது. பொதுவாக நம் பெண்களுக்கு ஒரு பயம் இருக்கும் போல என்று நான் நினைத்துக்கொண்டேன். எல்லா ஊர் பெண்களுக்குமே அந்த பயம் இருக்கும் என அங்கிருந்த டாக்ஸி ஓட்டுனர் மூலமாக தெரிந்து கொண்டேன். அவர் வெளிநாடு சுற்றுபயணம் செல்லும்போது அவருடைய மனைவி ஒரே ஒரு கண்டிஷன்தான் போடுவாராம்,"Don't bring AIDS" என்று  கூறுவாராம். கொஞ்சம் பழகியவுடனே மிகவும் நட்பாகி விட்டார், அவருக்கு திருமணமாகி நாற்பத்தி மூன்று ஆண்டுகள் ஆகி விட்டதாம், மிகவும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார், அவரே என்னிடம் "என் மனைவி இப்படி கூறினாலும் என் மீது மிக்க நம்பிக்கை வைத்திருக்கிறாள்" மேலும் அவளே "If someone wants to do something, he
need not go to a foreign country, he can do it at home" என்று  கூறுவாள் என்றார். நான் பத்திரமாக  வந்து சேர வேண்டி இருந்ததாலும் இது சொக்கனின் கவிதைபோன்ற காதல் கதை என்பதாலும் குத்து பாட்டுக்கெல்லாம் இடம் இல்லாமல் போய் விட்டது. இருந்தாலும் சில சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை....அதை பின்னர்  எழுதுகிறேன்....


கரையான்.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

படித்ததில் பிடித்தது

நீ, நான், அவன்.!

டாஸ்மாக்கில் சைட் டிஷ் கொண்டுவர லேட்டானதால் கொட்டு வாங்கும் சட்டை பட்டனில்லா சிறுவன், கார் கண்ணாடியின் தூசிகளை தட்டிவிட்டு ஓம் படம் வரைந்து தலையை சொறியும் அழுக்கு சட்டைக்காரன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளை முச்சந்திக்கு இழுத்து வரும் சாலை படம் வரைபவன், களைப்புக்கு தூங்கப்போறானோ , கொழுப்பு கரைக்க புணரப்போறானோ என்ற கேள்விகளை துறந்துவிட்டு தோள்கள் வலிக்க கட்டில் இழைக்கும் ஆசாரி, காற்று அமுங்கிப்போன சக்கரம் கொண்ட தள்ளுவண்டியை தள்ளிப்போகும் சோன்பப்டிக்காரன், சாமிகளை கண்ணாடி பிரேமிற்குள் அடைத்து விற்பவன், ரூ. 8 கடன்பாக்கியை மறக்காமல் தர வேண்டிக்கொள்ளும் கையேந்திபவன் ஓனர், ஐஸ் வேணுமா? வேணாமா? என அக்கறையுடன் கேட்டுக்கொண்டே ஈ ஓட்டும் கரும்பு ஜூஸ் கடைக்காரர், சூடா என்ன இருக்கு? என்ற கேள்வியை லட்சத்திநூறாவது தடவை கேட்டுவிட்டு டேபிள் துடைத்துக்கொண்டே கடகடவென ஒப்பிக்கும் இளைஞன், கோக்கையும் பெப்சியையும் சொன்ன விலைக்கு வாங்கிக்குடிப்பவர்களிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசிக்கொண்டிருக்கும் இளநி விற்பவர், பழைய லாரி தில் 'இங்கு பஞ்சர் ஒட்டப்படும்' என எழுதி காத்திருக்கும் ஹை-வே பட்டறைக்காரன், பீடி வலித்துக்கொண்டே குப்பையை அள்ளி நகராட்சி வண்டியில் போடும் துப்புரவாளர், இந்தியாவில் விற்கப்படும் அத்தனை பவுடர்களையும் வியர்வை கலந்து சுவாசிக்கும் பேருந்து நடத்துனர், தினமும் குறைந்தது பத்து பேரிடமாவது திட்டு வாங்கியும் நேரத்திற்கு செல்ல ஹாரன் அடிக்கும் ஓட்டுனர், 'அடுத்து வரும் பாடலை பாடுபவர்கள் உங்கள் எஸ்.பி.பி மற்றும் சின்ன குயில் சித்ரா' எனும் ரேடியோவை கேட்டபடி மெஷின் மிதிக்கும் தையற்காரர், எப்பொழுதும் தலைகனமாய் திரியும் சித்தாள், காதை ரூல் பென்சில் ஸ்டான்டாய் கொண்டிருக்கும் கொத்தனார், ஆந்தையோடு குடித்தனம் நடத்தும் தமிழ் மற்றும் திபெத்திய கூர்க்கா, ஆசுவாசப்படுத்திக்கொள்ள டீயை உறிஞ்சி குடிக்கும் குடும்ப சுமைகளை குறைக்க மூட்டை தூக்கும் மீசைக்காரர், குருவாயூரப்பனையும் மோகன்லாலையும் மறந்துவிட்டு நோயாளிகளுடன் வாழும் மலையாள நர்ஸ், தன்னைவிட முப்பது வருடம் இளையவனுக்கு ஹார்லிக்ஸ் வாங்கிவரும் காக்கிசட்டை பியூன், ஆட்டுக்குட்டிக்கு பஸ் டிக்கெட் எடுக்கணுமா என்ற கவலையுடன் பஸ் ஏறும் விவசாயி, விசேஷத்திற்கு போட்டுக்கொண்டு போகும் சட்டையை தலையணைக்கு அடியில் இஸ்திரி போடும் கைத்தறி நெசவாளி, துணி துவைக்கும் சோப்பிலேயே முகம் கழுவி சாப்பிட தயாராகும் மெக்கானிக், இதுவரை ஆயிரக்கணக்கான ஜாதகங்களை பிரதி எடுத்து கொடுத்துவிட்ட ஜெராக்ஸ் கடை முதிர்கன்னி, எக்ஸ்போர்ட் துணி பிசிறுகளை எட்டு மணி நேரம் நின்றுக்கொண்டே வெட்டிப்போடும் தினக்கூலிகள், இயற்கை தந்த மூன்று நாள் லீவில் மூன்றாம் நாளை விரும்பி கேன்சல் செய்துவிட்டு பவுடர் பூசும் விலைமாது, நாய் பொம்மை விற்க நாயை விட அதிகம் குலைக்கும் பொம்மை விற்பவன், மாதம் ஒரு நாள் சம்பள கவர் வாங்க தினமும் ஆயிரம் கவர்களை டெலிவரி செய்யும் கொரியர் இளைஞன், மற்றவர்கள் காலில் கற்பழிக்கும் செருப்பை கையால் தடவி வேலை செய்யும் வெத்தலை வாய்க்கார செருப்பு தைப்பவன், கஞ்சனையும் கடவுளாக்கும் குருட்டு பிச்சைக்காரன், மீன் பிடிக்க போய் கருவாடாய் திரும்பி வரும் மீனவன், சோப்புகளை தூக்கிக்கொண்டு வீதி வீதியை அலையும் விற்பனை பிரதிநிதி, களைப்பு தெரியாமல் இருக்க கட்டிங் போட்டுவிட்டு கண்களால் கற்பழிப்பவனுக்கு ஆடிக்காட்டும் கரக்காட்டக்காரி, பத்து ரூபாய்க்கு பாயாய் குனியும் பூசாரி, ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பாணி பூரி விற்கும் உ.பி'காரன், பத்து ரூபாய்க்கு சகல பிரியாணியும் போடும் நடமாடும் டிபன் வண்டிக்காரன், எல்லா அப்பார்ட்மென்ட்வாசிகளையும் தெரிந்து வைத்திருந்தும் இதுவரி யார் வீட்டுக்குள்ளும் நுழைய அனுமதி கிடைக்காத வாட்ச்மேன், டீ மாஸ்டர், பலகார மாஸ்டர், புரோட்டா மாஸ்டர், இந்த சமுதாயத்தை எப்படி நடத்த வேண்டுமென செய்துகாட்டும் பேப்பர் போடும் பையன், பிணத்தையும் சிரிக்க வைத்து போட்டோ எடுக்க கஷ்டப்படும் போட்டோகிராபர், கந்துவட்டிக்காரனுக்கு பாதி பணத்தை சம்பாதித்து கொடுக்கும் மார்கெட் காய்கறி கடைக்காரர்கள், வாழ்கையை வறுமையிலும் வண்ணமயமாய் வாழும் கோல பொடி விற்பவர், நைந்த கைலியுடன் பாய் விற்பவன், முட்டை இலந்தை நவாப்பழம் வெள்ளரி என சீசனுக்கு ஒன்று விற்று போகும் கூடைக்காரிகள், பாத்திரம் தேய்ப்பதற்கு சம்பளம் வாங்கி வீட்டு ஓனர் உடம்பை தேய்த்து போவதை சகித்துக்கொள்ளும் வேலைக்கார பெண்கள், இட்லி விற்கும் ரிட்டயர்ட் ஆகாத ஆயாக்கள், வாரம் நான்குநாள் லீவு விட்டுவிடும் குடிக்கார ஆட்டுக்கால் சூப் கடைக்காரர், ஜில் ஜில் ஜிகர்தண்டா விற்கும் சிடுமூஞ்சிக்காரர் என இந்த தேசத்தில் தான் எத்தனை கோடி மனிதர்கள்? எத்தனை கோடி கனவுகள்? எத்தனை கோடி தொழில்கள்? ஆனால் ஒரே ஒரு முதலாளி......................................................
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் பெயர் 'பசி'...!!!!!
.
.
.
.

................................................................................................................................................................
( "இந்த உலகத்தில் கை இல்லாதவன் உண்டு, கால் இல்லாதவன் உண்டு, வயிறு இல்லாதவன் இல்லை" என்று எங்கோ படித்த கவிதை ஒன்றின் உந்துதலில் எழுதியது )

வியாழன், டிசம்பர் 08, 2011

பயண அனுபவம்

வழக்கமாக மேற்கத்திய நாடுகள் செல்லும் நம் நாட்டவர்களுக்கு வரும் பிரச்னைகள்தான் எனக்கும், சாப்பிடுவதில் தொடக்கி, சாப்பிட்டதை  வெளியேற்றுவது வரையான நம் பழக்கத்துக்கு ஒவ்வாத அல்லது பழகாத  முறைகள் தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தாலும் இரண்டாம் நாளே பழகி விட்டது. சத்தம் எழுப்பாமல் கத்தி, குத்தி(fork) வைத்து சாப்பிடுவது என்பதை கொஞ்சம் பழகி கொள்ளவேண்டும். மேலும்  நான் சென்ற இடத்தில் இந்தியர்கள் அதிகம் வசித்ததால் அங்கிருந்த வெள்ளைக்காரர்களுக்கு  நான் உணவுடன் கத்தி சண்டை போட்டுக்கொண்டிருந்தது புதிதாக  தெரியவில்லை போலிருக்கிறது யாரும் என்னை விநோதமாக பார்க்க வில்லை. மேலும் சில இந்திய ஓட்டல்களில் வெள்ளைக்காரர்களே கைகளால் சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. இந்தியாவிலிருந்து குதிரை வாங்க வந்தவர்கள் என்னை விநோதமாக பார்த்தார்கள் ஏனென்றால் சவுதியிலிருந்து வந்திருந்த பலருக்கு மொழி பெயர்ப்பாளராக நான் உதவி கொண்டிருந்ததை பார்த்து ஒரு இந்திய குதிரை பண்ணையாளர் என்னிடம் " நீ துருக்கி காரன் என்று நினைத்தேன், நம்ம ஆள் மாதிரியே ஒருத்தன் அரபிகளுடன் சேர்ந்து குதிரை வாங்க வந்திருக்கின்றானே என்று யோசித்து கொண்டிருந்தேன்" என்றார்.  
தொடருவேன்.....

கரையான்.

திங்கள், டிசம்பர் 05, 2011

பயண அனுபவம்

கனவு தேசங்களில் ஒன்றான இங்கிலாந்து பயணம் கனவு போலவே முடிந்து விட்டது.  பல புது விஷயங்கள்,நீண்ட நாள் நண்பரை  நெடுநாட்களுக்குப்பின் சந்திக்கும்  வாய்ப்பு, புது மனிதர்கள், சொந்த நாட்டில் உள்ள எட்டாத மனிதர்களை சுலபமாக சந்திக்கும் வாய்ப்புகள் என மிக பயனுள்ள பயணமாக அமைந்து விட்டதில் மகிழ்ச்சி. பயண தொடக்கத்தில் போர்டிங் பாஸ் வாங்க வரிசையில் நின்றதிலிருந்து திரும்பி வரும் வரை excitement க்கு குறைவில்லாத பயணம். விசாவில் குறை கண்டிபிடித்து விமானத்தில் ஏற்றாமல் திருப்பி அனுப்பி விடுவார்களோ, இங்கிலாந்தில் நுழைய அனுமதிப்பார்களோ என எல்லாமே மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்ததை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
ரியாதில் போர்டிங் பாஸ் வாங்க பாஸ்போர்ட் விசா செக் செய்யும் போது கவுண்டரில் இருந்த பாகிஸ்தானிக்கு என்ன வயிற்றெரிச்சலோ தெரிய வில்லை முதல் முறை பயணம் செய்கிறீர்கள் நீங்கள் செல்ல இயலாது என்று கூறி பெரிய அதிகாரியை பார்க்க சொன்னான், அவருடைய பெரிய அதிகாரி என்னுடைய ஹோட்டல் முன்பதிவு முதலானவற்றை சரி பார்த்து விட்டு, நீங்கள் செல்லலாம் என்று கூறி அனுப்பினார், விசா விண்ணப்பிக்கும்போதே இதை எல்லாம் காட்டினால்தான் விசாவே கொடுப்பார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கின்றார்கள் என்று நினைத்து கொண்டேன்.  இங்கிலாந்தில் நுழையும்போது எதற்காக வந்தீர்கள் போன்ற கேள்விகள்  பணம் ஏதும் சம்பாதிக்க கூடாது வேலை செய்யக்கூடாது போன்ற நிபந்தனைகள் இதை எல்லாம் தாண்டி விமான நிலையத்தை விட்டு வெளி ஏறிய பிறகுதான் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

நாளை தொடருவேன்....

Sales ring Tattersalls, Newmarket

High Street, NewMarket.
கரையான்.

Super English by a Vet!!!


பாய்.

இது எந்த ஜாதி-2


பாய்.