ஞாயிறு, பிப்ரவரி 15, 2015

நீண்ட நாட்களுக்கு பின்னர் திரும்பவும் பதிவிடுவதில் மகிழ்ச்சி....

நான் நீண்ட நாட்களாக பதிவிடாமல் இருந்தமைக்கு நம் நண்பர்கள் பலவிதமான காரணங்களை நம் whatsapp மூலம் தெரிவித்துள்ளனர்...விரைவு இன்டர்நெட் வசதி இல்லாமைதான் முக்கிய காரணம், மேலும் பெரும்பாலான பதிவிகளுக்கு நம் நண்பர்கள் பெரிதாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்காததால் தோழர்/தோழியர் நாம் எழுதுவதை பெரிதாக எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய கருத்துக்களை பதிவிடுவதில்லை என்பதால் ஒரு நீண்ட நெடிய break எடுக்க வேண்டியதாகி விட்டது.
நம் தோழி தீபா அவர்களின் மறைவு எல்லோருக்குமே பேரிழப்புதான்...மரணங்கள் என்னை முடக்கிப்போட்டதில்லை...மிக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களை வாழ்வின் முக்கிய தருணங்களில் இழந்தவன் நான்.
பொருளாதார ரீதியாக நான் இன்னல்களை சந்தித்த காலம் இப்போதில்லை, வசதியாக வாழ தேவையான செல்வம் திரைகடலோடி தேடி சேர்த்து விட்டேன். புதிதாக ஒரு துறையில் நுழையும் போது எல்லோருக்கும் ஏற்படும் இன்னல்கள் யாராக இருந்தாலும் சந்தித்தே ஆக வேண்டும், அதற்கு நான் விதிவிலக்கல்ல.
இப்போது களத்தில் காணும் பல்வேறு விஷயங்களை வரும் நாட்களில் விவாதிக்க உள்ளேன், நம் நண்பர்கள் சிலருக்கு வருத்தம்/எரிச்சலாக இருக்கலாம்.
கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ஆவின்-ல் பணிபுரியும் தோழர்/தோழியருக்கு ஒரு வேண்டுகோள்...artificial insemination -இல் fertility rate எவ்வளவு.... அது எப்படி கணக்கிடப்படுகிறது.....

கரையான்.

சனி, பிப்ரவரி 08, 2014

மறக்க முடியுமா.....

கல்லூரி நாட்களில் விளையாட்டு போட்டிகளில் கல்லூரி சிறகு பந்து அணிக்காக நைனிடால் சென்று வந்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்... அனைத்திந்திய கால்நடை மருத்துவகல்லூரிகளுக்கு இடையேயான போட்டி ஜீ.பீ.பந்த் பல்கலைக்கழகம், பந்த் நகர், உத்தர பிரதேசம் -ல் நடந்தது. அதில் நம் கல்லூரி சார்பாக நம் சீனியர் பார்த்திபன், நான், நம் ஜூனியர் "தொப்பை"விஜயபாஸ்கர்(தொப்பை....மன்னிக்கணும் அப்படி சொன்னாதான்  மக்களுக்கு தெரியும், ஸ்போர்ட்ஸ் ன்னாவே ஹாக்கி விஜயபாஸ்கர்தான் நினைவுக்கு வரும் அதனால் தொப்பை சேர்த்துள்ளேன்), நம் இரண்டு வருட ஜூனியர் கோபிநாத் மற்றும் அணி பயிற்சியாளர் நம் P.D என ஐந்து பேர் கொண்ட குழு பயணித்தோம்....டெல்லி சென்று அடைந்து பின்னர் அங்கிருந்து மீட்டர் கேஜ் ரயிலில் ஒருநாள் இரவு பயணம் செய்து விளையாட்டு நடைபெறும் இடத்தை அடைய வேண்டும், டெல்லி வரை முன்பதிவு இருந்ததால் பரவாயில்லை ஆனால் டெல்லியிலிருந்து பந்த் நகர் செல்வதற்கு முன்பதிவு இல்லாத சாதாரண கட்டை சீட்டில் அந்த கடும் குளிரில் உட்கார்ந்து போவது மிகவும் கஷ்டமாக இருந்தது.





நம் தமிழ் நாட்டு மார்கழி மாத குளிருக்கே நடுங்கும் நான் ஜன்னல் சரியாக மூட முடியாத ரயில் பெட்டியில் கம்பளி போன்ற குளிர்கால உடைகள்  எந்த ஒன்றும் இல்லாமல் நடுங்கிக்கொண்டு பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். இரவு முழுதும் தூங்காமல் அடுத்த நாள் காலை சென்றடைந்தோம். குட்டி தூக்கம் போட்டு பின்னர் எழுந்து துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அடுத்த நாள் போட்டிகள் துவங்கியது நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி -க்கு எதிராக ஜெயித்தோம்  அடுத்து  ஜீ . பீ . பந்த் கல்லூரியிடம் போராடி தோற்றோம். பின்னர்தான் பெரிய கண்டம்  பஞ்சாப் ்பாடியாலா கால்நடை மருத்துவக்கல்லூரி க்கு விளையாடும் வீரர் பஞ்சாப் மாநில அணிக்காக அகில இந்திய போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுபவர் என்பது தெரிந்ததும் நம் அணி வீரர்களுக்கு வயிறு கலங்க ஆரம்பித்து விட்டது, கொடுமை என்னவென்றால் அவனுக்கு எதிராக விளையாட வேண்டிய பலிகடா நான்தான், முதல் செட்டில் மிக போராடி 10-15 என்ற ஸ்கோரில் தோற்றேன் அடுத்த செட் 6-15 என்று கேவலமாக தோற்றேன், இருந்தாலும் ஒரு ஆறுதல் அவனுக்கு எதிராக அதிக பாயிண்ட் எடுத்த வீரர் நான்தான். எங்கள் சக வீரர் கோபிநாத் அதிக கோபம் கொள்வார், அவர் கோபம் எந்த அளவுக்கென்றால் பார்வையாளர்கள் அவருக்கு John Mc Enroe  என்று பெயர் வைத்திருந்தனர், (அந்த நேரத்தில் John Mc Enroe அவரின் கோபத்திற்கு மிக  பிரபலம்), umpire ஒரு முறை அவருக்கெதிராக தீர்ப்பு சொல்ல கையிலிருந்த பாட்மிண்டன் ராக்கெட்டை அவரை நோக்கி வீசி எறிந்தார், நான் அந்த நடுவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தது. 
குளிர் வாட்டி எடுத்தாலும் அங்கு சென்று விளையாடியது ஒரு சிறந்த அனுபவம்.
இந்த போட்டிக்கு பின்னர் தொப்பை விஜயபாஸ்கர் "நைனிடால்" விஜயபாஸ்கர் என பெயர் மாற்றி வைத்துக்கொண்டான், மேலும் இத்தனை வருடங்கள் ஓடி விட்டாலும் மறக்காமல் நைனிடால் சென்று விளையாடிய சில strokes -இன்னும் ஆடி காட்டி கொண்டே இருக்கிறான், சென்ற வருடம் துபாய் சென்றிருந்தபோது கூட ஆடி காட்டினான்....


கரையான்.

புதன், டிசம்பர் 11, 2013

மறக்க முடியுமா...

ஹாக்கி விளையாட தெரிந்தவர்கள்  நம்ம வகுப்பில் ரெண்டு பேர்தான் தேறுவார்கள் என நினைக்கிறேன் வரதராஜன் மற்றும் வைரவசாமி , மற்ற வேறு யாரும் விளையாடியதாக நினைவில் இல்லை. நம்முடைய ஜூனியர்  அணியில் கிட்டத்தட்ட எட்டு பேர் கல்லூரி அணிக்காக விளையாடி கொண்டு இருந்தார்கள், அவர்கள் அணியின் முன் நம் அணி அர்ஜென்டினா கால்பந்து அணியுடன் இந்திய கால்பந்து அணி விளையாடினால் எப்படி இருக்குமோ அதுபோன்ற நிலைதான். இருந்தாலும் நம் அணி வீரர்கள் அருமையான ஒரு கூட்டமாக எதிரணியை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் வல்லவர்கள். இந்த முறை வரதராஜன் எனக்கு கோல் கீபர் வேலை கொடுக்காமல் மிட் பீல்ட் பதவி கொடுத்தார்(அப்போதுதான் முதல் முறையாக நான்  ஹாக்கி ஸ்டிக்-ஐ தொட்டேன்), ஓடி கொண்டே இரு எங்கேயும் நிற்காதே, பந்து எவரிடம் போனாலும் குச்சியுடன்(ஸ்டிக்) அவர்களை விரட்டிக்கொண்டே இரு இதுதான் கேப்டன்-ன் கட்டளை. மற்ற நண்பர்களுக்கும் அதே கட்டளைதான், இதிலே கொடுமை என்னவென்றால் பலருக்கும் ஆட்ட விதிமுறைகள் கூட தெரியாது, ஆனால் எல்லோரும் ஸ்டிக் ஐ எடுத்துக்கொண்டு களம் இறங்கி விட்டார்கள். காப்டனின் இன்னொரு கட்டளை "அவர்கள் கோல்  அடிக்க விட்டுவிட கூடாது, tie breaker ல் பார்த்து கொள்ளலாம்."  இருந்தாலும் அவர்கள் ஒரு கோல் அடிக்க ஆட்டத்தில்  பரபரப்பு கூடி விட்டது, தட்டு தடுமாறி நம் அணிக்காக வரதராஜனும் ஒரு கோல் அடிக்க எதிரணி வலுவாக இருந்தாலும் கொஞ்சம் அவர்களின் தன்னம்பிக்கையில் ஒரு சிறு விரிசல்...இது போதுமே நம்ம ஆட்கள் வழக்கமான கோஷ்டி கோஷ்டியாக தடுப்பாட்டம் ஆடி மேலும் அவர்கள் வெற்றி கோலை  அடிக்காமல் தடுத்து வெற்றி-தோல்வியை நிர்ணயம் செய்ய tie breaker முறைக்கு பந்தயத்தை நடத்தி சென்றார்கள். Tie breaker -ல் வரதராஜன் goal keeper  ஆக செயல் பட்டார், அந்த முறையிலும் 3-3 என டிரா ஆகி விட்டது, அடுத்ததாக sudden death முறை, அந்த முறையில் நாம் வெற்றி பெற்றோம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நம் அணி யானையின் காதில் புகுந்த எறும்பு, வெறும் இரண்டு வீரர்கள்களை வைத்துக்கொண்டு ஒரு பெரிய அணியை வீழ்த்தினோம். 
(சென்ற பதிவில் பாய் பௌலிங் பற்றி சொல்ல மறந்து விட்டேன் நம் அணி pg அணியுடன் விளையாடிய ஒரு மாட்சில் dr .iyappan அவர்களை முதல் பந்திலேயே கிளீன் போல்ட் ஆக்கி வீழ்த்தியது இன்னும் கண் முன்னே நிற்கிறது, நான்தான் அப்போது wicket -keeper )

கரையான்.

திங்கள், டிசம்பர் 09, 2013

சனி, டிசம்பர் 07, 2013

மறக்க முடியுமா??

கிரிக்கெட்டில் நம்ம வகுப்பில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும் கல்லூரி அணிக்கு தேர்வானவர்கள் குறைவுதான். அருண்,செந்தில்,பாய், பாபு, பார்த்திபன்,தாஸ்,குமாரவேல்  இப்படிப்பட்ட சூப்பர் டூபர் வீரர்கள் இருந்தாலும் நமக்கு இரண்டு வருட ஜூனியர்கள் பாஸ்கர் சேதுபதி தலைமையிலான அணி ரொம்பவும் வலிமை வாய்ந்ததாக  இருந்தது. நம்ம வகுப்பு அணி எப்போதும் முதல் சுற்றில் தோற்று வெளியேறியதில்லை, எப்படியோ அடித்து பிடித்து இறுதி சுற்றுக்கு வந்து சேர்ந்து விடுவோம். அப்படி ஒரு ஆட்டத்தில் நமக்கு இரு வருட ஜூனியர் களுடனான ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. டாசில் வென்ற எதிரணி நம்மை பாட்டிங் செய்ய அழைத்தது. நம்ம அணியின் "the wall" என்று அழைக்கப்படும் பாபு, முதல் ஓவரிலேயே திரும்பி விட்டான், தலை சிறந்த மட்டையாளர்கள் எல்லாம் தலை தப்பினால் போதும் என்று சென்ற வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பி விட்டார்கள்,எதிரணியை சேர்ந்த சத்தியமூர்த்தி மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளர்களான Holding, Garner, Marshal ரேஞ்சுக்கு பந்து வீசிக்கூண்டு இருந்தான், இருபது ரன்னுக்குள் 4 விக்கெட்களை பறி  கொடுத்து விட்டு நம் அணி தடுமாறி கொண்டு இருந்தது, நம்முடைய அணி வீரர்களுக்குள்ளே கடும் போட்டி யார் பாட்டிங் செய்ய கடைசியாக செல்வதென்று (நான் போகல நீ போ அடுத்து என்று ஒவ்வொருவரும் அடுத்தவரை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்கள்) ஜாம்பவான் களுக்கே இந்த நிலை என்றால் என்னைப்போன்ற tailenders நிலைமை என்னவாகும், இப்படி நீ போ நான் போ என்ற போட்டியில் ஐந்தாவது ஆட்டகாரனாக என்னை தள்ளி விட்டார்கள்(அனுப்பினார்கள் என்ற சொல் இங்கே உபயோகப்படுத்த முடியாது), முதல் சில பந்துகள் வயிற்றில், கையில் என உதை  வாங்கி கதறிக்கொண்டு நின்றேன், சில அடிகள் வாங்கிய பின் கொஞ்சம் கோபம், பொண்ணுங்க முன்னாள் அடி வாங்கியதால் ஏற்பட்ட அவமானம் (நம்முடைய ஜூனியர் களை ஊக்கப்படுத்த அவர்கள் பாட்ச் பெண்கள் மைதானத்திற்கு வந்திருந்தார்கள்) எல்லாமாக சேர்ந்து இனி தப்பிக்க வேறு வழியே இல்லை பதில் தாக்குதல்தான் ஒரே வழி என முடிவு செய்தேன்..சத்தியமூர்த்தியின் பந்து வீச்சை சமாளிக்க ஒரே வழி திரும்ப தாக்குவது, கண்ணை மூடிக்கொண்டு மட்டை சுழட்ட இரண்டு சிக்ஸர், அது வரை தெனாவட்டாக பந்து வீசிக்கொண்டு இருந்த எதிர் அணி கொஞ்சம் இறங்கி  வந்தது, என்னுடன் தாஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினான், நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட அறுபது ரன்கள் சேர்த்தோம், பின்னர் தாஸ் அவுட்டாகி வெளியேற அருண் வந்தான், நன்றாக விளையாடிக்கொண்டு இருக்கும்போது அருண் ஒரு single run -க்கு அழைக்க நான் வேகமாக ஓடினேன், ஆனால் அவன் அழைத்தானே தவிர ஓட வில்லை, நான் அவுட்டாகி வெளியேற வேண்டியதாகியது , பயங்கர கடுப்பில் பிட்சிலேயே வைத்து அவனை திட்டி விட்டு வந்தேன்.(அதற்காக பிறகு மன்னிப்பு கேட்டேன்), முடிவில் ஓரளவு மரியாதையான ரன்கள் எடுத்திருந்தோம், 130 என்று நினைக்கிறேன். நாம் அந்த மாட்சில் தோற்றாலும் போராடி தோற்றோம் அவர்கள் 8 விக்கட்டுகளை இழந்து கடைசி ஓவரில்தான் வெல்ல முடிந்தது....நம் அணியில் பாய், பார்த்திபன், பாபு, அருண், செந்தில், குமாரவேல் சிறப்பாக பந்து வீசினார்கள்.

கரையான்.

வெள்ளி, டிசம்பர் 06, 2013

மறக்கமுடியுமா...


இந்த புகைப்படத்தை  பார்க்கும்போது பழைய நினைவுகள் சிறகடித்து பறக்க ஆரம்பித்து விட்டது....
நம்ம பாட்ச் -ல ஒரு பெரிய பலம்  நான் பெரியவன் என்ற எண்ணம் இல்லாமல்  ஒரு அணியாக செயல் படுவது... நான் கைப்பந்து மற்றும் சிறகுப்பந்து ஆகிய  விளையாட்டுகளிலும் நன்றாக விளையாடக்கூடியவனாக இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா விளையாட்டுகளிலும் கலந்து கொண்டு விளையாடினேன்.(செஸ், carrom ஆகிய மூளையை உபயோகித்து விளையாட வேண்டிய விளையாட்டுக்கள் தவிர) அதில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் என் நினைவிலிருந்து.....
நம்முடைய immediate juniors உடன் விளையாடிய கால்பந்து போட்டி மறக்கமுடியாத ஒன்று...வரதராஜன் வைரவசாமி அப்பாலோ ஆகிய முக்கிய வீரர்கள் சேர்ந்து ஒரு அணியை உருவாக்கினார்கள் என்னை goal keeper(பலி கடா) ஆக தேர்வு செய்து, மிகப்பெரிய பொறுப்பை(காக்கை  தலையில் பனம்பழம்) என்னிடம் ஒப்படைத்தார்கள், நமக்கு எதிர் அணி நல்ல பலம் வாய்ந்தது, அதில் நம் கல்லூரி அணியின் முக்கியமான வீரர்கள் இருந்தது அவர்களுக்கு பெரும் பலம். என்னதான் சிறந்த வீரர்களாக இருந்தாலும் எதிர் அணியில் உள்ளவர்கள் ஒரு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விளையாடா  விட்டால் நன்றாக விளையாடுபவர்களின் ரிதம்(rhythm ) பாதித்து   அவர்களால் சிறப்பாக விளையாட்டை வெளி படுத்த முடியாது, நம் ஜூனியர்கள் ராணுவ வீர்கள் போல் சிறப்பாக அணி வகுத்து விளையாடுபவர்கள் நம் அணி வீரர்கள் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டது போல் சிதறி ஓடி அணி வகுப்பை சீர் குலைப்பவர்கள், இதனால் அந்த சிறந்த அணி திணறி விட்டது. நம் அணியில் எல்லோரும் mid fielders , defenders, forward எல்லா நிலைகளிலும் விளையாடி எதிரணியின் அனைத்து ஆட்டக்காரர்களையும் நிலைகுலைய வைத்து வெறுப்பேற்றி கொண்டு இருந்தார்கள், ஒரே இடத்தில் நின்று ஆடியவர்கள் என்றால் நான் கோல் கீபர் மற்றவர் அப்பாலோ அவன் முட்டியில் அடிபட்டிருந்ததால் அதிகம் ஓட முடியாமல் defendfer ஆக விளையாடிக்கொண்டு இருந்தான். முதல் பாதியில் கோல்  இல்லை , இரண்டாவது பாதியிலும் அதே நிலை , வரதராஜன் நாம் எப்படியாவது சமன் செய்து விட்டால் tie breaker  இல் ஜெயித்து விடலாம் என்று ஆலோசனை கொடுத்தார். இன்னும் பத்து நிமிடங்கள்தான் அவர்கள் ஜெயிக்க விளையாடிக்கொண்டு இருந்தார்கள் நாங்கள் தோற்காமல் இருக்க விளையாடி கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் அவர்கள் அணியின் ஐயப்பன் மிகவும் கடுப்பாகி மைதானத்தின் அவர்கள் பக்க பாதியிலிருந்து பந்தை வேகமாக உதைத்தான்,பந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது, சுலபமாக பிடிக்க கூடியதாக பறந்து வந்து கொண்டிருந்தது, நானும் முன்னேறி பிடிக்க செல்கிறேன், அது வரை சும்மா இருந்த அப்பாலோ தலையால் முட்டி பந்தை திருப்பி அனுப்ப முயற்சி செய்ய அவன் நடு  மண்டையில் பட்டு பந்து மேலெழுந்து பின்னோக்கி பறக்க தொடங்கியது, அதாவது என் தலைக்கு மேல் கோலை நோக்கி, அவ்வளவுதான் ஆட்டம் முடிந்து விட்டது...
இன்னும் சுவாரஸ்யமான தமாஷ்களுடன்  தொடரலாம்....

கரையான்.